சென்னை: சென்னை சிந்தாதிரிப்பேட்டையிலுள்ள சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய தலைமை அலுவலகக் கட்டடம், தரை மற்றும் ஆறு தளங்களைக் கொண்டது. இக்கட்டடத்தின் பல்வேறு பகுதிகள் சேதமடைந்திருந்தது. இதனால் ஆவணங்களை பராமரிப்பதிலும், பணியாளர்களின் தினசரி அலுவல்களிலும் சிரமம் ஏற்பட்டு வந்தது.
இதனால் தமிழ்நாடு அரசு, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய தலைமை அலுவலகத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுத்தது. அதன்படி, 24 கோடியே 92 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றன.
பணிகள் நிறைவு பெற்ற நிலையில், புனரமைக்கப்பட்ட சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய தலைமை அலுவலகக் கட்டடம் இன்று(மார்ச்.13) திறந்து வைக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இக்கட்டிடத்தை திறந்து வைத்தார்.
அதேபோல், அங்கு 1 கோடியே 13 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தையும் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, சென்னைப் பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் புதிதாக வடிவமைக்கப்பட்ட வலைதளத்தின் சேவையையும் (chennaimetrowater.tn.gov.in) தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
புதுப்பிக்கப்பட்ட சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய தலைமை அலுவலகக் கட்டடத்தில், நவீன உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, மின்தடங்கள் மாற்றியமைக்கப்பட்டு, அலுவலகத்தின் ஆறு தளங்களும் புனரமைக்கப்பட்டுள்ளன.
ஆறாவது தளத்தில் 100 பேர் அமரக்கூடிய வகையில் ஒரு கூட்ட அரங்கும், முதலாவது தளத்தில் வாரியக் குழு கூட்ட அரங்கு மற்றும் 50 பேர் அமரக்கூடிய வகையில் ஒரு சிறிய கூட்ட அரங்கு ஆகியவை குளிர் சாதன வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், அலுவலகப் பகுதி முழுவதும் தீயணைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
புதிய கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம், பொதுமக்கள் மற்றும் நுகர்வோர், குடிநீர் மற்றும் கழிவுநீர் தொடர்பான புகார்களை தெரிவித்து, நிவர்த்தி செய்வதற்கு ஏதுவாக 24 மணி நேரமும் செயல்படக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட இக்கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில், எல்இடி திரை நிறுவப்பட்டு, இத்திரையில் குடிநீர் வாரியத்தால் இயக்கப்பட்டு வரும் 40 நீரேற்று நிலையங்களில் லாரிகள் மூலம் நீர் நிரப்பப்படுவது, லாரிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் வழங்கல் பணிகள், கழிவு நீரேற்று நிலையங்கள், குடிநீர் பகிர்மான நிலையங்கள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படும். குடிநீர் வழங்கும் லாரிகளின் இயக்கம் மற்றும் கழிவு நீரகற்றும் ஜெட்ராடிங் இயந்திரங்களின் இயக்கங்கள் ஜிபிஎஸ் முறையில் கண்காணிக்கப்படும்.
இதையும் படிங்க: 12 வருடத்திற்கு பிறகு பயன்பாட்டுக்கு வரும் சென்னையின் அடையாளம்!