சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், பொதுமக்களின் போக்குவரத்து பயன்பாட்டிற்காகவும் கொண்டு வரப்பட்ட மெட்ரோ ரயில் சேவையானது வேலைக்கு செல்வோர், இளைஞர்கள், இதர பயணிகளுக்கு விரைவாக செல்ல பேருதவியாக உள்ளது.
தற்போது கோடை காலம் என்பதால் பெரும்பாலான மக்கள் காலை, மதிய வேளைகளில் வெளியில் செல்ல தயங்குகின்றனர். வேலைக்கு செல்வோர், இதர தரப்பு மக்கள் பொது போக்குவரத்தையே நம்பி இருக்கின்றனர். மின்சார ரயில் சேவை, மாநகர் பேருந்து சேவைக்கு அடுத்து மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில், மெட்ரோ நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை மெட்ரோ சுரங்க ரயில் நிலையங்களில் படிப்படியாக குளிர்சாதன வசதி குறைக்கப்படும். பயணிகளுக்கு தேவையான ஆக்சிஜன் வசதி கிடைக்க காற்றோட்ட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மின்சார செலவீனத்தை குறைக்கவும், தண்ணீர் சிக்கனத்திற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு பயணிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.