சென்னை: இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று (பிப்.13) மற்றும் நாளை (பிப்.14) வறண்ட வானிலை நிலவக்கூடும். முக்கியமாக ஓரிரு இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலையாக இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும்.
அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் வருகிற 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
அதிகபட்ச வெப்பநிலையாக 33 முதல் 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 20 முதல் 21 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். தற்போது உள்ள வெப்பநிலையில் அதிகபட்ச வெப்பநிலையாக ஈரோட்டில் 37 டிகிரி செல்சியஸ், சேலத்தில் 35.7 டிகிரி செல்சியஸ், கரூர் பரமத்தியில் 35.5 டிகிரி செல்சியஸ் என பதிவாகியுள்ளது.
அதேபோல் தற்போது உள்ள வெப்பநிலையில் குறைந்தபட்ச வெப்பநிலையாக கொடைக்கானலில் 19.2 டிகிரி செல்சியஸ், குன்னூரில் 22.5 டிகிரி செல்சியஸ், உதகமண்டலத்தில் 25.3 டிகிரி செல்சியஸ் என்றும் பதிவாகியுள்ளது. மேலும் கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை” என குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து நிலவும் வறண்ட வானிலை குறித்து விளக்கமளித்த வானிலை ஆய்வு மையம்,“பகல் நேரங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பனியின் தாக்கம் குறைந்து காணப்படுகிறது. இரவு நேரங்களில் காற்றின் வேகம் குறைந்து வெப்பத்தின் தாக்கமும் குறைவதால், பனியின் தாக்கல் அதிகமாக காணப்படுகிறது. அதிகாலை நேரங்களில் பனியின் தாக்கல் வலுப்பெற்று பனியின் தாக்கமும் அதிகரிக்கிறது. அடுத்த சில நாட்களில் பனியின் தாக்கம் குறைந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது” என தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: 'அடுத்த 4 நாட்களுக்கு வெயில் உக்கிரமா இருக்கும் - பார்த்து மக்களே!'