சென்னை: சென்னையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (மே 21) விடுமுறை தினத்தை கழிக்க மெரினா கடற்கரை வந்த கணவன், மனைவி மற்றும் அவரது நண்பர்களை வழிமறித்த மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி பெண்ணிடம் தவறாக நடக்க முயன்று பணம் பறித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து அண்ணா சதுக்கம் காவல்நிலைய போலீசார் அளித்துள்ள தகவலின் படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த ஒரு தம்பதி, தங்களின் நண்பர்கள் இருவருடன், கடந்த ஞாயிற்று கிழமையன்று(மே 21) மாலை மெரினா கடற்கரைக்கு சென்றுள்ளனர். அனைவரும் பொழுதை கழித்து விட்டு வீட்டிற்கு புறப்பட்டுள்ளனர். சேப்பாக்கம் ரயில் நிலையத்திற்கு வந்தபோது அடையாளம் தெரியாத மூன்று பேர் கொண்ட கும்பல் ஒன்று கையில் கத்தியுடன் அந்த பெண்ணின் கையைப் பிடித்து இழுத்து தவறாக நடக்க முயற்சித்துள்ளனர்.
மேலும் கத்திமுனையில் அந்த பெண்ணை இருட்டான பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது பயத்தில் இருந்த பெண் கையைத் தட்டி விட்டு கணவர் அஸ்வினின் உதவியுடன் அங்கிருந்து தப்பித்து அண்ணா சதுக்கம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றுவிட்டனர்.
ஆனால், சம்பவ இடத்தில் இருந்த நண்பர்கள் இருவரையும் கத்தி முனையில் மிரட்டிய அந்த கும்பல் அவர்களிடம் இருந்த பணம் மற்றும் ஹெட்செட் ஆகியவற்றை பறித்து கொண்டு அருகிலிருந்த கல்லால் இருவரின் தலையிலும் தாக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
இதில் பாதிக்கப்பட்ட மூன்று நபர்களும் தனித்தனியாக அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனை அடுத்து இவர்களது புகார்களின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் அந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் பாதிக்க்கப்பட்டவர்கள் கூறிய அடையாளத்தை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில் இச்சம்பவத்தில் ஈடுப்பட்டது மெரினாவில் குதிரை ஓட்டும் சூர்யா, மணிகண்டன் மற்றும் வினோத் என்பது தெரியவந்தது.
அதன் அடிப்படையில் மணிகண்டனை கைது செய்த போலீசார் மற்ற இருவரையும் தேடி வருகின்றனர். சென்னை அண்ணா சதுக்கம் காவல் நிலையம் உட்பட்ட சேப்பாக்கம் மைதானம் அருகே இருக்கக்கூடிய சேப்பாக்கம் ரயில்வே சாலை மற்றும் விக்டோரியா ஹாஸ்டல் சாலை என இருசாலைகளிலும் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்திருப்பதாகவும், சாலையில் நடந்து செல்வதற்கே பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் பயணிப்பதாகவும் ஏற்கனவே பலமுறை புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று பறக்கும் ரயிலுக்கு செல்லும் வழியும் எப்போதுமே இருள் சூழ்ந்தே காணப்பட்டு வருவதாக பொதுமக்களும் குற்றச்சாட்டை முன் வைத்து வந்தனர் என்பது குறிப்பிடதக்கது.
இதையும் படிங்க: காவல் ஆணையரின் காரை சேதப்படுத்திய நடிகை.. காதலனுடன் சேர்ந்து அட்டூழியம்!