காணும் பொங்கலை தொடர்ந்து சென்னையில் உள்ள பல்வேறு சுற்றுலாத்தலங்களில் ஆயிரக்கணக்கில் மக்கள் குவிந்தனர். அதன் ஒரு பகுதியாக சென்னை மெரினா கடற்கரையில் மக்கள் குடும்பங்களுடன் வந்து மகிழ்ந்தனர். அங்கு குழந்தைகள் கடற்கரை மண்ணில் விளையாடுவது, ராட்டினம் ஆடுவது, கடற்கரை காற்றில் பண்டங்கள் சாப்பிடுவது, புகைப்படம் எடுப்பது என அனைத்து கவலைகளையும் மறந்து மகிழ்ந்தனர்.
தொடர் பொங்கல் விடுமுறையால் மெரினா கடற்கரையில் அதிக கூட்டம் வரும் என்ற நிலையில், காவல் துறையினர் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர். அதில், குறிப்பாக ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து பொது மக்களுக்கு அறிவுரை வழங்குவது, ட்ரோன் கேமரா உபயோகித்து கண்காணிப்பது போன்றவை ஏற்பாட்டில் இருந்தது.
மேலும் கடற்கரைக்கு வந்த பொதுமக்களிடம் காவலன் செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. குழந்தைகள் தொலைந்து போனால் எளிதாக கண்டுபிடிக்க அவர்கள் கைகளில் ரிஸ்ட் பேண்ட் (wrist safety Band) காவலர்களால் கொடுக்கப்பட்டிருந்தது. காணும் பொங்கல் குறித்து பொது மக்கள் கூறுகையில், மெரினாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் நன்றாக உள்ளது. மக்கள் அனைவரும் ஒன்றுகூடி பொங்கல் விழாவை சிறப்பித்து கொண்டாடுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
கருணாநிதி, அண்ணா, எம்.ஜி.ஆர் நினைவிடம் போல் ஜெயலலிதா நினைவிடத்தை பார்க்க இயலவில்லை. அதை அரசு விரைவாக மக்கள் பார்வைக்கு கொண்டு வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.
இதையும் படிங்க:
காணும் பொங்கல்: மக்கள் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு