சென்னை: நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு தனது மருத்துவர் கனவை இழந்த அரியலூர் மாணவி அனிதா கடந்த 2017ஆம் ஆண்டு தற்கொலை செய்து உயிரிழந்தார். அனிதாவின் மரணம் நாடு முழுவதும் எதிரொலித்தது. தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்தன.
நீட் தேர்வுக்குப் பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையிலும், தற்போது வரை நீட் தேர்வு நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. அதேபோல் மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் படிப்புகளில் சேர்வதற்கும் கியூட் என்ற பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த நிலையில், நீட் மற்றும் கியூட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், லயோலா கல்லூரியின் அகில இந்திய கத்தோலிக்க பல்கலைக்கழக கூட்டமைப்பு (AICUF) மாணவர்கள் பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த பாடல் சென்னையில் கடந்த 14ஆம் தேதி வெளியிடப்பட்டது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இதனை வெளியிட்டார்.
HINT YouTube channel-ல் இப்பாடல் வெளியிடப்பட்டுள்ளது. 'டாக்டராகும் கனவையெல்லாம் நீட் கெடுக்குது, பட்டப்படிப்பு படிக்க வந்தா கியூட்டு தடுக்குது' என்ற வரிகள் இப்பாடலில் இடம்பெற்றுள்ளன. இதனை நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி உயிரிழந்த மாணவி அனிதா உள்ளிட்ட மாணவர்களுக்கு அர்ப்பணிப்பதாக லயோலா கல்லூரி மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: முறையாக வரி செலுத்தியதால் ரூ.6 கோடி வரை ஊக்கத்தொகை - சென்னை மாநகராட்சி