சென்னை: தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக கரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைய தொடங்கியது. அதன்படி கடந்த 26ஆம் தேதி சென்னையில் 122 நபர்களுக்கு மட்டுமே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
ஆனால் தற்போது தினசரி நோய் பாதிப்பு கடந்த 27ஆம் தேதி முதல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 26ஆம் தேதி சென்னையில் கரோனா தொற்றால் 122 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்த நாள்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கைகள் 139ஆகவும், 164ஆகவும் அதிகரித்துள்ளது.
கடந்த இரண்டு நாள்களாக நோய் பாதிப்புகள் சற்று அதிகரித்திருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இதுவரை மொத்தமாக, 5 லட்சத்து 37 ஆயிரத்து 546 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் 5 லட்சத்து 27 ஆயிரத்து 757 பேர் குணமடைந்துள்ளனர். 1,474 பேர் சிகிச்சையில் உள்ளனர். 8 ஆயிரத்து 315 பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோல, கேரளாவில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அம்மாநில அரசு சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என இன்று அறிவித்துள்ளது.
இதையும் படிங்க : கட்டண மீட்டரை மாற்றினால் நடவடிக்கை: உயர் நீதிமன்ற மதுரை கிளை