சென்னை: தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் ஜமுனா ரமேஷ், சைலஜா ஆகியோர் நேற்று (ஆக. 10) சென்னை வேப்பேரியில் காவல் ஆணையர் சங்கர் ஜிவாலை சந்தித்து தங்களின் ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளரைச் சந்தித்த தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் ஜமுனா ரமேஷ், "சென்னையின் புறநகர்ப் பகுதிகளான போரூர், பூந்தமல்லி, ஆவடி, தாம்பரம் பகுதிகளில் உள்ள பெண்கள் விடுதிகளில் சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக எங்கள் ஆணையத்திற்குத் தொடர்ச்சியான புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன.
பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள பெண்கள் விடுதிகளை ஆணையம் சார்பில் நாங்கள் ஆய்வுமேற்கொண்டோம். அங்கு பெண்கள் விடுதி என்ற பெயரில் ஸ்பா, அழகு நிலையங்கள் உள்ளிட்டவை முறையான உரிமம், அனுமதியின்றி செயல்பட்டுவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு பல்வேறு சட்டவிரோத செயல்கள் நடைபெற்றுவந்ததும் ஆய்வில் தெரியவந்தது.