சென்னை: திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகே கேசிபி லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் கனரக இயந்திரப் பொருள்கள், சிமென்ட், பவர், இரும்பு போன்ற பொருள்களைச் செய்யும் பணியில் ஈடுபட்டுவருகிறது.
பல அரசு, தனியார் நிறுவனங்களுக்குத் தேவைப்படும் கனரகப் பொருள்கள் இங்குத் தயாரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் இஸ்ரோ நிறுவனத்தின் சார்பில் பிஎஸ்எல்வி ராக்கெட்டின் இடைநிலை அமைப்பு கருவி தயாரிக்கும் பணி 2018ஆம் ஆண்டு இந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
பல சூழலில் வெப்பம் தாங்கும் திறன்
கடந்த மூன்று ஆண்டுகளாக 2.8 மீட்டர் சுற்றளவில் 4.1 மீட்டர் உயரத்தில் முழுவதும் அலுமினியத்தால் இந்த இடைநிலை அமைப்பு தயாரிக்கப்பட்டு பல்வேறு சூழலில் வெப்பம் தாங்கும் திறன் சோதனை மேற்கொள்ளப்பட்டு இந்த இடைநிலை அமைப்பு கருவி முழுவதுமாகத் தயாரிக்கப்பட்டு பயன்பாட்டிற்குத் தயாரானது.
இந்நிலையில் முழுவதும் தயார் நிலையில் இருந்த பிஎஸ்எல்வி ராக்கெட்டின் இடைநிலை அமைப்பு கருவியை கேசிபி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் வீடியோ கான்பிரன்சிங் மூலம் இஸ்ரோ அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.
இதில் கேசிபி நிறுவனத் தலைவர் எம். நாராயண ராவ், இஸ்ரோ நிறுவனத்தின் துணைப் பொது மேலாளர் டாக்டர் சீனிவாசன், மேலாளர் எட்வின் சிபி, குடியுரிமை தர குழுவைச் சேர்ந்த ஹரிகரன், சுகன்யா ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் அனைவரும் இணைந்து இடைநிலை அமைப்பு கருவி இருந்த கன்டெய்னர் லாரியை கொடியசைத்து தொடங்கிவைத்தனர். பின்னர் லாரி மூலமாக இஸ்ரோவிற்கு கருவி எடுத்துச் செல்லப்பட்டது.
தமிழ்நாட்டில் கேசிபி முதல் இடம்
இது குறித்து நாராயணன் ராவ் ஈடிவி பாரத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, "கேசிபி 67 ஆண்டுகள் பழமையான கனரக கருவிகள் தயாரிக்கும் நிறுவனமாகும். இஸ்ரோ மூலமாக எங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு வழங்கப்பட்டது.
இஸ்ரோவில் ஏவப்படும் பிஎஸ்எல்வி ராக்கெட்டில் முக்கிய இடத்தில் பயன்படுத்தப்படும் கருவியைத் தயார் செய்வதற்கான ஆணை வழங்கப்பட்டது.
இதனைத் தயாரிப்பதில் இந்தியாவில் நாங்கள் இரண்டாவது இடத்திலும், தமிழ்நாட்டில் முதலிடத்திலும் இருக்கிறோம்.
வாடிக்கையாளர்களுக்குத் திருப்தி
இந்த இடைநிலை அமைப்பு கருவி முழுவதுமாகத் தயாரிக்கப்பட்டு இஸ்ரோவிடம் வழங்கப்பட்ட நிலையில் வாய்ப்பை வழங்கிய வாடிக்கையாளர்கள் இஸ்ரோ, இதை எங்களுக்கு வடிவமைத்துக் கொடுத்த வடிவமைப்பாளர் குழுவினரும் மிகவும் திருப்தி அடைந்துள்ளனர்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'அம்மா உணவகத்தை மூடினால் என்ன? என துரைமுருகன் கேட்டது மனவேதனை...!'