சென்னை, பல்லாவரம் அடுத்த திருநீர்மலைப் பகுதியைச் சேர்ந்தவர் சேசு ராஜ் (எ) ரயிலு (37). இவர் பிரபல கஞ்சா வியாபாரி. கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனைசெய்த வழக்கில் பலமுறை சிறைக்குச் சென்றுவந்தவர். எங்கும் கஞ்சா கிடைக்கவில்லை என்றாலும் இவரிடம் மட்டும் எப்போதும் கஞ்சாவுக்குப் பஞ்சமிருக்காது. அதனால் கஞ்சா பிரியர்களின் முதல் தேர்வு ரயிலுதான்.
ஆனால், தற்போது தமிழ்நாடு அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததிலிருந்தே ரயிலுவால் வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியவில்லை. இதனால் கஞ்சாவை வாங்கி விற்க முடியாத நிலை ஏற்பட்டது. இவரிடம் வழக்கமாகக் கஞ்சா வாங்குபவர்கள் செல்போன் மூலம் தொடர்புகொண்டு கஞ்சா வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
ஆனால் இவரால் கஞ்சா கொடுக்க இயலவில்லை. கண நேரத்தில் சிந்தித்த ரயிலு தனது வாடிக்கையாளர்கள் ஏமாந்துவிடக் கூடாது என்றெண்ணி, "நான் விரைவில் உங்கள் போதைக்காக கள்ளச்சாராயம் வேண்டுமென்றால் தருகின்றேன். ஆனால் ஒரு லிட்டர் சாராயம் இரண்டாயிரம் ரூபாய்" எனக் கூறியுள்ளார்.
இந்தப் பேச்சுவார்த்தையில், ரயிலுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் சுமூக ஒப்பந்தம் ஏற்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் கள்ளச்சாராயத்திற்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, தங்களுக்கு போதைதான் முக்கியம் என ரயிலுவின் வாடிக்கையாளர்கள் சொல்லிவிட்டனர்.
இதையடுத்து, ரயிலு கள்ளச்சாராயத்தை காய்ச்ச தொடங்கினார். அதன்படி, சுமார் பத்து நாள்களாக வீட்டின் அருகே கள்ளச்சாராயம் காய்ச்ச ஊறல் போட்டுள்ளனர்.
கள்ளச்சாராயம் ஊறல் வாசனை அவ்வழியாகச் சென்ற பொதுமக்களின் மூக்கைத் துளைத்ததால் இது குறித்து உடனடியாக சங்கர் நகர் காவல் துறையினருக்குத் தகவல் பறந்தது.
அதனடிப்படையில், காவல் துறையினர் அங்கு விரைந்துவந்து சேசு ராஜின் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது, அவர் கள்ளச்சாராயம் காய்ச்ச ஊறல் போட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, காவல் துறையினர் சேசு ராஜை கைதுசெய்து கள்ளச்சாராயம் காய்ச்ச வைத்திருந்த ஊறல்களைப் பறிமுதல்செய்து அவர் மீது மூன்று பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிந்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி மதுராந்தகம் சிறையில் அடைத்தனர்.
திருநீர்மலைப் பகுதியில் உள்ள அடையாறு ஆற்றங்கரை பகுதியில் 'குடி'மகன்களின் நடமாட்டம் தொடர்வதாக மதுவிலக்குப் பிரிவு காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
உடனடியாக திருநீர்மலைப் பகுதி, அதனைச் சுற்றியுள்ள பகுதிகள், கல்குவாரிகளை ஒட்டிய அடையாறு ஆற்றங்கரையோரம் ஆகிய இடங்களில் மதுவிலக்கு காவல் துறையினர் ட்ரோன் கேமரா மூலம் தீவிர சோதனை செய்துவருகின்றனர்.
இதையும் படிங்க:ஆவடியில் கள்ளச்சாராயம் காய்ச்சிய மூவர் கைது!