சென்னை: கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி, சென்னை ஐஐடி மாணவி பாத்திமா விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
பின்னர் இதுகுறித்து கோட்டூர்புரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். பின்னர் இந்த வழக்கானது அதே ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.
வழக்குத்தொடர்பாக புகார் எழுந்ததையடுத்து, சில பேராசிரியர்களிடத்தில் விசாரணை நடத்தப்பட்டன. சர்ச்சைகள் அதிகமானதையடுத்து வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி உயிரிழந்த மாணவியின் தந்தை அப்துல் லத்தீப் கோரிக்கை விடுத்தார்.
அதன்படி வழக்கானது கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி சிபிஐக்கு மாற்றப்பட்டது.
சிபிஐ அலுவலர்கள் இயற்கைக்கு மாறான மரணத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வழக்கில் முன்னேற்றமில்லாததால், வழக்கை உடனடியாக விரைந்து விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ள சிபிஐ அலுவலர்கள், விசாரணைக்கு ஆஜராகும்படி அப்துல் லத்தீப்பிற்கு சம்மன் அனுப்பியிருந்தனர்.
இதற்காக கொச்சியில் இருந்து விமானம் மூலமாக சென்னை வந்தடைந்த அப்துல் லத்தீப், சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "சிபிஐ கேட்ட அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் அளித்தோம். சுமார் 2.30 மணி நேரம் எங்களிடமிருந்து தகவல்களை கேட்டுப் பதிவு செய்து கொண்டனர்.
எங்களது மகள் இறந்து இரண்டு ஆண்டுகளாகியும், இன்னும் நியாயம் கிடைக்கவில்லை. இதுகுறித்து நாளை (டிச.7) தமிழ்நாடு முதலமைச்சரை சந்திக்கவுள்ளோம். எனது மகளின் மரணத்திற்குக் காரணமான குற்றவாளிகள் விரைவில் தண்டிக்கப்பட வேண்டும்' என்றார்.
இதையும் படிங்க: சரவணா ஸ்டோர் குழும சோதனை; ரூ.1,230 கோடி வரிஏய்ப்பு கண்டுபிடிப்பு!