சென்னை: கோட்டூர்புரத்தில் இயங்கி வரும் ஐஐடி கல்லூரி வளாகத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த உன்னி கிருஷ்ணன் என்பவரின் உடல் எரிந்த நிலையில் கிடந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில், உன்னி கிருஷ்ணன் எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. இதனைக் கண்ட காவல் துறையினர், இது தற்கொலை தான் எனத் தெரிவித்தனர்.
இதையடுத்து, உன்னி கிருஷ்ணனின் தந்தை, மற்றும் அவரது குடும்ப நண்பருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து இன்று (ஜூலை 02) காலை கோட்டூர் புரம் காவல் நிலையத்தில் வைத்து அவர்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர், உன்னி கிருஷ்ணன் தற்கொலை செய்துகொண்டதை உறுதி செய்யும் வவையில் கிடைக்கப்பெற்ற கடிதத்தை அவரது தந்தையிடம் காண்பித்தனர். இதையடுத்து, உன்னி கிருஷ்ணனின் உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லும் நடவடிக்கையில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.
தந்தைக்கு தகவல் கொடுத்த காவல் துறை:
இது குறித்து உன்னி கிருஷ்ணனின் குடும்ப நண்பர் ஷாஜி வர்கீஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'உன்னி கிருஷ்ணனின் மரணத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து கடிதம் எழுதி வைத்துள்ளார். அதை தங்களிடம் காவல் துறையினர் காண்பித்தனர். எத்தனை மணிக்கு உன்னி கிருஷ்ணன் இறந்துபோனார் என சரியாகத் தெரியவில்லை. காவல் துறையினருக்கு நேற்று 6 மணிக்குத் தகவல் கிடைத்துள்ளது. தகவல் கிடைத்த சில மணி நேரங்களில் அவரது தந்தைக்கு காவல் துறையினர் தகவல் தெரிவித்தனர். நான் சென்னையில் வசித்து வருவதால் என்னிடம் இது குறித்த தகவலைத் தெரிவித்தனர்.
இன்று (ஜூலை 02) காலை கோட்டூர் புரம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்தனர், அதன்பேரில் நானும் உன்னி கிருஷ்ணனின் தந்தையும் நேரில் சென்றோம். ஐஐடி வளாகத்திற்குள் எத்தனை மணிக்கு உன்னி கிருஷ்ணன் உள்ளே வருகிறார். எங்கெல்லாம் செல்கிறார் என கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை எங்களிடத்தில் காண்பித்தனர்.
தற்கொலைக்குச் சொந்தப் பிரச்னை காரணமில்லை:
தற்கொலை கடிதம் படித்தபோது அதில் எந்தவித சந்தேகப்படும்படியான விஷயங்களும் குறிப்பிடப்படவில்லை. தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு எழுதப்பட்ட கடிதம் போலவே அது இல்லை. வாழ்க்கையில் விரக்தியின் உச்சத்தில் இருந்த ஒரு நபர் தனது வாழ்வின் மீது வெறுப்படைந்த ஒரு நபர் எழுதிய கடிதம் போல இருந்தது. சொந்த வாழ்க்கையை கையாளத் தெரியாமல் இருந்தார் என்பது கடிதம் மூலம் தெரியவந்தது.
மேலும் கடிதத்தைப் படிக்கும்போது தனது சொந்த பிரச்னை காரணமாகவோ, குடும்ப பிரச்னை காரணமாகவோ அல்லது ஐ.ஐ.டி நிர்வாக பிரச்னை காரணமாகவோ தற்கொலை செய்து கொள்ளவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், எந்த காரணத்திற்காக தற்கொலை செய்துகொண்டார் என்பது தெரியவில்லை. தினமும் மூன்று முறையாவது தனது தந்தை, தாய் குடும்பத்தினரிடம் சாதாரணமாக உன்னி கிருஷ்ணன் பேசி வந்திருக்கிறார். சம்பவம் நடந்த நேற்று (ஜூலை 01) மதியம் கூட தனது தாயிடம் மிகவும் இயல்பாக வீடியோ காலில் பேசியிருக்கிறார்.
மிகவும் இயல்பாக இருந்த நிலையில், உன்னி கிருஷ்ணன் இறந்தது மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. இந்த வழக்கு விசாரணையில் யாரையும் நாங்கள் குற்றம் சுமத்த விரும்பவில்லை. குடும்பம் இயல்பான நிலைக்குத் திரும்ப வேண்டும்” என்றார். மேலும், மாணவர் தற்கொலைக்கான காரணம் குறித்து கடிதத்தில் குறிப்பிடாததால், காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: இதையும் படிங்க: கைகள் கட்டப்பட்டு எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்பு: நடந்தது என்ன?