சென்னை: கணிதம் மூலம் மாணவர்களின் சிந்திக்கும் ஆற்றல் மற்றும் புதிய சிந்தனைகளை ஊக்குவிக்கும் வகையில்
”அவுட் ஆஃப் தி பாக்ஸ் திங்கிங்” பாடத்திட்டத்தினை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயன் பெறும் நோக்கில் சென்னை ஐஐடி அறிமுகம் செய்துள்ளது.
மேலும் ஆன்லைன் மூலம் கட்டணமின்றி நடத்தப்படும் இந்த பாடத்திட்டம், இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும், கணித சிக்கலைத் தீர்க்கும் பல்வேறு அணுகுமுறைகளை வெளிப்படையாகக் கற்பிப்பதில் கவனம் செலுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் முதலில் ஆங்கிலத்தில் அறிமுகம் செய்யப்பட்டாலும், அனைத்து மாெழிகளிலும் தயார் செய்யப்பட்டு அளிக்கப்படும் எனவும், தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களின் திறனை அதிகரிக்கத் தமிழ் மொழியில் பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்படும் என சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி தெரிவித்தார்.
சென்னை ஐஐடி பிரவர்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன் மூலம் கட்டணமின்றி ஆன்லைனில் இந்தப் பாடத்திட்டம் கற்பிக்கப்படுவதுடன் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கிரேடு சான்றிதழும் வழங்கப்பட உள்ளது. தேர்விற்குக் குறைந்தபட்ச கட்டணமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் குறிப்பிட்ட நகரங்களில் உள்ள மையங்களில் இறுதித்தேர்வு நடத்தப்படும். இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள அனைவருக்கும் ஆன்லைன் முறையில் இலவசமாகப் பாடத்திட்டம் கிடைக்கும். 4 நிலைகளாக நடைபெற உள்ள இந்தப் பாடத்திட்டம் மாணவர்கள், பயிற்றுநர்கள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் எளிதில் அணுகக் கூடியதாக இருக்கும்.
முதல்முறையாக ஜூலை 1, 2022 அன்று வகுப்புகள் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு 24 ஜூன் 2022 அன்று நிறைவடையும். ஆர்வமுள்ளவர்கள் பின்வரும் இணைப்பின் மூலம் விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம். https://www.pravartak.org.in/out-of-box-thinking.html
சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி புதிய பாடத்திட்டம் குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், ’இந்தியாவிலேயே முதன்முறையாகத் தொடங்கப்பட்டுள்ள இப்பாடத் திட்டம் வரவிருக்கும் நாட்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அடுத்த சில ஆண்டுகளிலேயே இந்த பாடத்திட்டத்தின் பலன்களைக் காண முடியும். கட்டணம் ஏதுமின்றி பாடத்திட்டத்தைக் கிடைக்கச் செய்திருக்கிறோம். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம், ஊரகப் பகுதிகளில் வசிப்பவர்களுக்குப் பெருமளவில் பயன்கிடைக்கச் செய்யும், ’அவுட் ஆஃப் தி பாக்ஸ்' சிந்தனை என்பது மறைமுகமான மற்றும் ஆக்கப்பூர்வமான அணுகுமுறை மூலமாக பிரச்சனைகளைத் தீர்ப்பதாகும்.
கணிதத்தில் உடனடியான தீர்வுகள் கிடைக்காத நேரத்தில், கணிதத்தில் கண்டறியப்பட்ட மற்றும் அறியப்படாத உண்மைகளை தர்க்கரீதியாகவும், விரிவாகவும் ஆர்வத்துடனும் கண்டுபிடிப்பதன் மூலம் அத்தகைய சிந்தனை வலியுறுத்தப்படுகிறது.
புதிய நுட்பங்களை எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய பாணியில் அறிமுகப்படுத்துவதுடன், நிஜவாழ்க்கையில் எந்த திட்டத்தையும் தன்னம்பிக்கையோடு எளிதில் எதிர்கொள்ளப் பயனர்களைத் தயார்ப்படுத்தும்.
கணிதப் படிப்பில் தர்க்கவியல்தான் அடிப்படை என்பதால், விரிவடைந்து உள்ள தொழில்நுட்ப உலகில் அதன் பயன்பாட்டின் மூலம் பரந்த சிந்தனையை வளர்ப்பது அவசியமாகிறது. கணித சிக்கல்களுக்குத் தீர்வு காணும் முறைகளில் ஈடுபாட்டை ஏற்படுத்தி கணிதம் உள்ளிட்ட பல்வேறு ஒலிம்பியாட் போட்டிகளிலும் கலந்து கொள்ள முடியும்.
இந்த பாடத்திட்டம் 4 நிலைகளில் கற்பிக்கப்படுகிறது. நிலை 1ல் 5ஆம் வகுப்பிற்கு மேலும், நிலை 2ல் 7ஆம் வகுப்பிற்கு மேலும், நிலை 3ல் 9ஆம் வகுப்பிற்கு மேலும், நிலை 4ல் 11ஆம் வகுப்பிற்கு மேலும் மாணவர்கள் சேர்ந்து படிக்கலாம். நிலை 1 மற்றும் 2க்கு தலா 20 மணி நேரம் வகுப்பும், நிலை 3 மற்றும் 4க்கு தலா 30 மணி நேரம் என 100 மணி நேரம் 7 ஆண்டுகளில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படும். ஒவ்வொரு நிலையிலும் குறிப்பிட்ட இடத்திற்கு வந்து கம்பியூட்டர் மூலம் தேர்வு எழுத வேண்டும்.
மாணவர்களின் திறனை அறிய தேர்வு நடத்தப்பட்டு, சான்றிதழ் வழங்கப்படும். சென்னை மட்டுமல்லாமல், அனைத்து மாவட்டங்களிலும் இதனைக் கொண்டு சேர்க்க மையங்கள் தொடங்க இருக்கிறோம். கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களுக்குக் கல்வி அளிப்பதற்காக பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்தும் சென்னை ஐஐடி செயல்பட்டு வருகிறது. பள்ளிக்கல்வித்துறைக்கும் கணிதப் பாடத்தினை கற்பிக்கும் முறையை தருவதற்கும் தயாராக இருக்கிறோம்’ என சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடிதெரிவித்தார்.
இதையும் படிங்க: ஏஞ்சலோ மோரியோண்டோ; காஃபி மிஷின் தந்தைக்கு டூடுல் வெளியிட்ட கூகுள்