சென்னை: சென்னை ஐஐடி மாணவர்கள் நடத்தும் சாரங் கலாச்சார நிகழ்வின் துவக்க நிகழ்வில் முதல் முறையாகத் தமிழ்நாடு கிராமிய கலைகளுடன் துவங்க உள்ளது. இது குறித்து, சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி செய்தியாளர்களிடம் கூறும்போது, "சென்னை ஐஐடி மாணவர்கள் நடத்தும் கலாச்சார விழாவான சாரங் இன்று (ஜன.10) தொடங்கி ஜனவரி 14ஆம் தேதி வரை கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.
மார்டி கிராஸ் என்ற பெயரில் தென்னிந்தியக் கலாச்சாரத்தில் முதலில் நடத்தப்பட்டது. இக்கல்வி நிறுவன வளாகம் எங்கும் காணப்படும் மான்களைக் கொண்டாடும் விதமாகவும் மார்டி கிராஸ் 1996ஆம் ஆண்டு முதல் 'சாரங்' என மறுபெயரிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் 50 ஆண்டு பொன்விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
சாரங்கை பிரமாண்ட வெற்றியடையச் செய்ய சுமார் 850 மாணவர்கள் இணைந்து செயலாற்றி வருகின்றனர். சிறிய கலாச்சார விழாவாக ஆரம்பித்த சாரங், கடந்த 50 ஆண்டுகளில் கலைஞர்கள், மாணவர்கள், சமூகங்களுக்கு இடையிலான பெரிய அளவிலான சர்வதேச ஒத்துழைப்பாக உருவெடுத்து தலைமுறைகளைக் கடந்து நீண்டதூரம் பயணித்துள்ளது.
இந்த 50வது ஆண்டில் நானும், வயலின் இசைக் கருவியை வாசிக்க உள்ளேன். இதற்கான பயிற்சியை மேற்கொண்ட போது தான் கலைகள் எவ்வளவு கடினமானது என்பதை உணர்ந்தேன். சென்னை ஐஐடி 2024-25ஆம் கல்வி ஆண்டில் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீடு அறிமுகப்படுத்த உள்ளோம்.
அதே போல, இன்னும் இரண்டு ஆண்டுகளில் கலைகளை ஊக்கவிக்கும் வகையில் கலாச்சார இட ஒதுக்கீடு அறிமுகப்படுத்த வேண்டும் என்று ஆசை இருக்கிறது. கலையை ஊக்குவிக்கும் வகையில் சிறிய அளவில் உள்ள அரங்கை மிகப்பெரியதாக மாற்றிக் கட்ட உள்ளோம்.
ஐஐடி-யில் நடைபெறும் சாரங் நிகழ்வு மாணவர்களின் மனச் சோர்வையும், இறுக்கத்தையும் குறைக்கும் என நம்புகிறோம். அதே போல மாணவர்களின் திறமைகளை அங்கீகரிக்க வேண்டியும் இந்நிகழ்வு நடத்தப்படுகிறது. இந்தியா முழுவதும் இருந்து 70-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 80,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.
இந்த ஆண்டு, தமிழ்நாட்டின் கிராமிய கலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நிகழ்வின் துவக்க விழாவில் கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் என பல கிராமிய கலைகள் நடைபெற உள்ளது. இந்த விழாவில் நாசர், கவுதம் வாசுதேவ் மேனன், ருக்மிணி விஜயகுமார், உஷா உதுப், மனோஜ் பாஜ்பாய், மாரி செல்வராஜ் போன்ற புகழ்பெற்ற பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
மேலும், சாரங்கின் கருப்பொருளாக ஊர்ஜம் என்ற தலைப்பில், அதாவது ஆற்றல் சேமிப்பை மையமாகக் கொண்டு பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களுக்கு மாறும் வகையில், உணர்வு மிக்க முடிவுகளை எடுக்க மக்களை ஊக்குவிப்பதே ஊர்ஜம் பிரச்சாரத்தின் நோக்கமாகும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: கடற்கொள்ளையர்களை தடுக்க நடவடிக்கை! அரேபிய கடல், செங்கடலில் என்ன நடக்கிறது? - கடற்படை தளபதி!