சென்னை: மனிதனின் மூளை குறித்து அறிந்து கொள்ள உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய ஆராய்ச்சி மையம் சென்னை ஐஐடியில் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் மூளையின் வளர்ச்சி, நோய், உள்ளிட்ட புலப்படாத தகவல்களை மிக நுண்ணியமாக அறிய முடியும் என ஒன்றிய அரசின் முதன்மை ஆராய்ச்சி ஆலோசகர் கே. விஜயராகவன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஐஐடியில் மனித மூளையை உயிரணு அளவில் கண்டறிவதற்கான 'சுதா கோபலகிருஷ்ணன் மையத்தை' ஒன்றிய அரசின் முதன்மை ஆராய்ச்சி ஆலோசகர் கே.விஜயராகவன் இன்று (மார்ச் 19) திறந்துவைத்தார். இந்நிகழ்வில், சென்னை ஐஐடியின் இயக்குநர் காமகோட்டி, பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.
அதன்பின், மத்திய அரசின் முதன்மை ஆராய்ச்சி ஆலோசகர், விஜயராகவன் கூறுகையில், "மனிதனின் மூளையை குறித்து அறிந்து கொள்ள உயர் தொழில்நுட்பம் மூலம் ஆராய்ச்சி மையம் ஐஐடியில் தொடங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற ஆராய்ச்சி மையம் உலகத்தில் வேறு எங்கும் இல்லை. இந்த மையத்தில் கிடைக்கப்பெரும் தகவல்கள் மருத்துவத்துறைக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
முதன்மையாக மூளையின் அதன் வளர்ச்சி, நோய், அறுவை சிகிச்சை, தாக்கங்கள் குறித்து புலப்படாத தகவல்கள் அறிய முடியும். நகரத்தின் வழிகாட்டி போல் மூளையின் வழிகாட்டியான வரைபடம் செமி அளவில் தெரிந்து கொள்ள முடியும். முழு மூளை சார்ந்த தகவல்களை அறிய 3 மூளைகள் ஆராய்ச்சி நிலையில் உள்ளது.
அடுத்த 3 மாதங்களில் அதன் முடிவுகள் தெரியவரும். இந்த ஆராய்ச்சி பணியில் 10 ஐஐடி பேராசிரியர்கள், 30 ஆராய்ச்சியாளர்கள், உலகின் தலை சிறந்த 6 பேராசிரியர்கள் உள்ளனர். இந்த ஆராய்ச்சியின் மூலம் மூளை சார்ந்த நோய்களை கண்டறிந்து உலகளவில் பயன்படுத்த முடியும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:வேளாண் பட்ஜெட் 2022-23: ஊறுகாய் புல் உற்பத்தி அமைப்புக்கு ரூ.10.50 லட்சம் மானியம்!