சென்னை: சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள், நெல் கழிவுகளை மறுசுழற்சி செய்து தொழில்துறை பயன்பாட்டிற்கான மூலப் பொருட்களாகத் தயாரிக்கும் வகையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பத்தை உருவாக்கத் திட்டமிட்டு உள்ளனர்.
நெல் கழிவுகளைப் பயன்படுத்தி தொழில்துறையினர் எரிசக்தி சாதனங்களை உற்பத்தி செய்ய முடியும் என்பதால், விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் வகையில் இந்த தொழில்நுட்பம் அமைந்துள்ளது. வட இந்தியாவில் வைக்கோல் எரிப்பு மற்றும் இதர பண்ணைக் கழிவுகள் எரிப்பதைக் குறைக்க இந்த அணுகுமுறை முக்கியப் பங்களிப்பை வழங்கும்.
கரிமக் கழிவுகள், குறிப்பிட்ட சமையலறைக் கழிவுகள் ஆகியவற்றைக் கொண்டு சிறப்பு மின்தேக்கிகளில் முக்கிய உதிரிபாகமாகப் பயன்படுத்தப்படும் செயல்படுத்தப்பட்ட கார்பனை உருவாக்குவதன் மூலமாக புதிய பண்ணை ஆற்றல் ஒருங்கியக்கத்தை (Farm-Energy Synergy) தங்கள் பணியின் மூலம் ஆராய்ச்சியாளர்கள் முன்னெடுத்து வருகின்றனர். நெல் கழிவுகளில் கிடைக்கும் செயல்படுத்தப்பட்ட கார்பனால் தயாரிக்கப்படும் சிறப்பு மின்தேக்கிகள், மின்னணுவியல், எரிசக்தி, விவசாயம் ஆகிய துறைகளில் நுகர்வோருக்கு பல்வேறு நன்மைகளை அளிப்பதுடன், சிறப்பு மின்தேக்கிகள் துறையில் தற்சார்பை வளர்க்கவும் உதவுகின்றன.
சிறப்பு மின்தேக்கிகள் மற்றும் அதன் அடிப்படையிலான எரிசக்தி சேமிப்பு ஆகியவற்றில் தற்சார்பை எட்டுவதன் வாயிலாக அறிவுசார் சொத்துரிமைப் பதிவு, வேலைவாய்ப்பு ஆகியவை அதிகரிக்கும். இந்தியாவில் ஆண்டுக்கு 760 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு நெல் கழிவுகள் சேர்கின்றன. வைக்கோலை மண்ணுக்குள் செலுத்த அதனை எரிப்பதுதான் சிக்கனமான, பொருத்தமான தீர்வாக விவசாயிகள் கருதுகின்றனர். இதனால் கணிசமான அளவுக்கு மாசுபாட்டையும், கடுமையான சுற்றுச்சூழல் பிரச்னைகளும் ஏற்படுகிறது. மேலும், உயிரி எரிப்பின் சாத்தியமான பயன்பாடும் குறைகிறது. பண்ணைக் கழிவு மேலாண்மையை இவ்வாறு கையாள்வதால் இந்தியாவில் மட்டும் ஏறத்தாழ 92,600 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டு உள்ளது.
காய்கறிக் கழிவு போன்ற உயிரி எரிபொருட்களை உயிரி கழிவுகளாக மாற்றுவதன் மூலம் கிடைக்கும் செயல்படுத்தப்பட்ட கார்பனைப் பயன்படுத்தி, சிறப்பு மின்தேக்கிகளுக்கான மின்முனைப் பொருட்களை (supercapacitor electrode materials) தயாரிக்கலாம் என சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே நிரூபித்துள்ளனர். அதே தொழில்நுட்பத்தைக் கொண்டு, நெல் கழிவுகளில் இருந்து செயல்படுத்தப்பட்ட கார்பனை உற்பத்தி செய்யலாம். செயல்படுத்தப்பட்ட கார்பனை உருவாக்கவும், உற்பத்தி அளவை ஆராயவும் எவ்வாறான அணுகுமுறையை மேற்கொள்வது என்பதுதான் எதிர்காலத் திட்டமாகும்.
இது குறித்து சென்னை ஐஐடி டீன் (முன்னாள் மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் உறவுகள்) மகேஷ் பஞ்சக்நுலா கூறுகையில், ''இந்தியப் பொருளாதாரத்தின் முக்கிய அங்கமாக விவசாயம் தொடர்ந்து நீடித்து வருகிறது. நெல் கழிவுகள் போன்ற உயிரிகளை செயல்படுத்தப்பட்ட கார்பனாக மாற்றும் இந்த திருப்புமுனைத் தொழில்நுட்பம் ஆரோக்கியம், சுற்றுச்சூழல், பொருளாதாரத்தில்
குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்’’ எனத் தெரிவித்தார்.
சென்னை ஐஐடி உலோகவியல் மற்றும் பொருட்கள் (Mettallurgical and Materials) துறையின் இணைப் பேராசிரியரான டிஜு தாமஸ் கூறும்போது, ''நன்கு வரையறுக்கப்பட்ட செயல்முறை மூலம் தீர்வைக் கண்டறிந்துள்ளோம். நாட்டில் உள்ள நெல் கழிவுகளை வணிகத் தரமான கார்பன் பொருளாக மாற்றவும், சந்தைத் தரத்திற்கு ஏற்ப சிறப்பு மின்தேக்கிகளை உருவாக்கும் வகையில் செயல்படுத்தப்பட்ட கார்பனைப் பயன்படுத்தவும் இத்தொழில்நுட்பம் உதவும். பொருத்தமான சிறப்பு மின்தேக்கி அடிப்படையிலான கலப்பின எரிசக்தி சேமிப்பு சாதனத்தின் வடிவத்தில் இந்தப் பொருள் செயல்படுத்தப்படும்.
சிறப்பு மின்தேக்கிகளை மாடுலர் இணைப்பில் வழங்குவது உலகம் முழுவதும் உள்ள எரிசக்தி தீர்வுகளுக்கு உதவிகரமாக இருக்கும். குறிப்பாக, இது ஒரு தனித்துவமான, புதுமையான, அளவிடக்கூடிய பண்ணையில் இருந்து எரிசக்தியாக மாற்றும் திறனுடையதாக இருக்கும். இதனால் விவசாயிகளும், தொழில்துறையினரும் ஒரே நேரத்தில் பயனடைவார்கள். நாடு முழுவதும் நன்மை தரக்கூடிய அளவில் இதனை செயல்படுத்தவும் முடியும்’’ எனத் தெரிவித்தார்.
ஐ.நா.வின் நிலையான பல்வேறு வளர்ச்சி இலக்குகளுக்கு இத்திட்டத்தின் மூலம் பின்வரும் முக்கியப் பங்களிப்பை இந்தியா வழங்க முடியும்; குறைந்த செலவில் தூய்மையான ஆற்றல், ஏற்புடைய வேலையுடன் பொருளாதார வளர்ச்சி, வறுமையின்மை, திறன் உருவாக்கம், ஆரோக்கியமும் நல்வாழ்வும், பொறுப்பான நுகர்வும் தயாரிப்பும், காலநிலை நடவடிக்கை, செயல்படுத்தப்பட்ட கார்பனைப் பொறுத்தவரை எரிசக்தித் துறை மட்டுமின்றி நீர் சுத்திகரிப்பு, மருந்துப் பொருட்கள் தயாரிப்பு, உயிரி கார்பன் உற்பத்தி
போன்றவற்றுக்கும் பயன்படுத்தக் கூடியதாகும்.
இதையும் படிங்க:பள்ளி மாணவர்களின் தகவல்கள் திருட்டு: முக்கிய நபருக்கு போலீசார் வலைவீச்சு!