பொள்ளாச்சி பாலியல் வழக்கின் சிபிஐ விசாரணையை நீதிமன்ற மேற்பார்வையில் நடத்த வேண்டும் என வழக்குரைஞர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார்.
சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர் புகழேந்தி தாக்கல் செய்த மனுவில், பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்களை ஒரு கும்பல் பாலியல் கொடுமை செய்துள்ளது.
இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், மாணவியின் சகோதரரை, பாலியல் கொடுமை செய்த கும்பல் தாக்கியதாகவும், மிரட்டியதாகவும் மற்றொரு குற்ற வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு கடந்த 13ஆம் தேதி அரசாணை வெளியிட்டுள்ளது. ஆனால், அரசாணையில் புகாரளித்த மாணவியின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. நிபுன் சக்சேனா வழக்கில் பாலியல் கொடுமையில் சிக்கிய பெண்ணின் பெயர் உள்ளிட்ட எந்த அடையாளத்தையும் வெளியிடக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரையும் அரசாணையில் வெளியிட்டுள்ளது. அதனால், வழக்கு நேர்மையாக நடைபெற உயர் நீதிமன்ற மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.