சென்னை: திண்டுக்கல் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இச்சாலை வழியாக தமிழ்நாடு-கர்நாடக மாநிலங்களுக்கு இடையே பேருந்து மற்றும் சரக்கு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
மேலும் தாளவாடி, ஆசனூர், கேர்மாளம் உள்ளிட்ட மலைப் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன.
இந்த மலை கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்கள் திம்பம் மலைப்பாதை வழியாக சத்தியமங்கலம், ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு மருத்துவ வசதி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லுதல் மற்றும் அரசு பணிக்கு செல்வோர், கல்லூரிக்குச் செல்லும் மாணவ மாணவியர் என தினந்தோறும் திம்பம் மலைப்பாதை வழியாக பயணிக்கின்றனர்.
மேலும் மலைப் பகுதிகளில் விளையும் காய்கறி உள்ளிட்ட விளை பொருள்களும் பெரும்பாலும் விவசாயிகள் இரவு நேரத்தில் திம்பம் மலைப்பாதை வழியாக வாகனங்களில் சத்தியமங்கலம், கோயம்புத்தூர், மேட்டுப்பாளையம், கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர்.
இந்நிலையில் திம்பம் மலைப்பாதை வழியாக இரவு நேரங்களில் பயணிக்கும் வாகனங்களால் சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் அடிபட்டு உயிரிழப்பதால் இரவுநேர போக்குவரத்தை ஏன் தடை செய்யக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர், வனத்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பிப்ரவரி 24ஆம் தேதிக்குள் கருத்து கேட்புக் கூட்டம் நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கர்நாடக எல்லையில் உள்ள முதுமலை பந்திப்பூர் இடையே இரவு நேர போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 10 லட்சம் - பறிமுதல் செய்த பறக்கும் படை