சென்னை: கணவரைப் பிரிந்து வாழும் பெண் ஒருவர், தனது நான்கு வயதுக் குழந்தையைக் கடத்திச் சென்று, கணவர் சட்டவிரோதமாகக் காவலில் வைத்திருப்பதால், குழந்தையை மீட்டுத்தர உத்தரவிட வேண்டும் எனக் கோரி அப்பெண் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் சரவணன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, கணவனைப் பிரியும் முன், மனுதாரர் தனது குழந்தையை, வேண்டுமென்றே கணவரிடம் விட்டுச் சென்றுள்ளார் எனக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் தந்தையிடம் குழந்தை வளர்ந்து வரும் நிலையில் அதைச் சட்டவிரோத காவலில் இருப்பதாகக் கருத முடியாது எனக் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும், அகம்பாவமும், அன்பும் ஒரு சேர பயணிக்க முடியாது எனவும், அகம்பாவம் உறவைக் கெடுத்து விடும் எனவும் தெரிவித்த நீதிபதிகள், அகம்பாவம், சகிப்புத் தன்மையின்மையைக் காலணிகளாக வீட்டுக்கு வெளியில் விட்டுச் செல்ல வேண்டும் எனவும், இல்லாவிட்டால் தம்பதியருக்கு மட்டுமல்லாமல், குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படும் எனவும் தெரிவித்தனர்.
மனைவி என்பவர் குடும்பத்தின் ஆணிவேர் போன்றவர் எனவும், கணவர் அடிமரம் எனவும் மற்ற உறுப்பினர்கள் கிளைகள் எனவும் குறிப்பிட்ட நீதிபதிகள், வேர் சேதமடைந்து விட்டால் மொத்த குடும்பமும் பாதிப்படையும் என்பதால், கணவன் - மனைவி தங்கள் குழந்தைகளின் நலனைக் கருதி அகம்பாவங்களை விட்டொழிக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.
இதையும் படிங்க: பில்லி, சூனியத்திற்கு எதிராக சட்டம் - கேரள அரசு