சென்னை: சேலத்தை சேர்ந்த எஸ்.ஆர். வரதராஜன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள மாரியம்மன் கோயிலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் எருது ஆட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு எருதாட்டம் நிகழ்ச்சி நடத்தக்கூடாது என கிராமத்தினரை அன்னதானப்பட்டி காவல் நிலையத்தினர் எச்சரித்தனர். மீறி நடத்தினால் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்படும் என மிரட்டுகின்றனர்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்டு வரும் கலாசார நிகழ்ச்சிகள் தொடர்பாக எவ்விதமான புகாரோ, விரும்பத்தகாத சம்பவங்களோ இதுவரை ஏற்படவில்லை. எனவே கோயில் திருவிழாவில் எருதாட்டம் உள்ளிட்ட கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்துவதை தடுக்கக்கூடாது எனக் காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கே. கல்யாணசுந்தரம் மற்றும் வி. சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று (ஜன 13) விசாரணைக்கு வந்தது.
அப்போது, கரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஜனவரி 15, 16, 17, 18 ஆகிய தேதிகளில் கோயில்களை திறப்பதற்கும் விழாக்கள் நடத்துவதற்கும் தமிழ்நாடு அரசு விதித்துள்ளது.
இந்தத் தடையை சுட்டிக்காட்டி, கோயில்களை திறக்க அனுமதிக்கப்படும் மற்றொரு நாளில் விழாவை நடத்துவதற்கு அனுமதி கோரி புதிய மனுவை காவல்துறையிடம் வழங்க வேண்டும் என்று மனுதாரருக்கும், அதை சட்டத்திற்குட்பட்டு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என்று காவல்துறைக்கும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க: முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை ஏற்பு - கேரளாவில் நாளை பொங்கல் விடுமுறை!