தமிழ்நாடு அரசு ஓய்வுபெற்ற ஊழியர் சண்முகம், குடல் கட்டி அறுவைச் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பொதுக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனது ஓய்வூதியத்திலிருந்து பங்களிப்பை வழங்கியிருந்த அவர், மருத்துவச் செலவு தொகையான 2 லட்சத்து 74 ஆயிரத்து 147 ரூபாயை திரும்பத்தரக்கோரி மருத்துவப் பணிகள் இயக்குநருக்கு விண்ணப்பித்தார்.
காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்கப்படாத மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகக் கூறி அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து சண்முகம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், எட்டு வாரங்களில் மருத்துவச் செலவை திரும்ப வழங்க உத்தரவிட்டது.
இந்நிலையில், 2 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் மருத்துவச் செலவை வழங்கக்கோரிய நிலையில், 57 ஆயிரத்து 860 ரூபாயை மட்டுமே அரசு வழங்கியது. இதை எதிர்த்து சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிதாக மற்றொரு வழக்கினைத் தொடர்ந்தார்.
இந்த வழக்கானது நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சண்முகத்தின் மருத்துவச் செலவைத் திரும்பி வழங்குவதற்கான கருத்துரு நிதித்துறைச் செயலாளரின் முன்பு நிலுவையில் இருப்பதால், அதன் தற்போதைய நிலை குறித்து தெரிவிக்க அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து ஓய்வுபெற்ற ஊழியரான மனுதாரரை மீண்டும் நீதிமன்றத்திற்கு இழுக்க விரும்பவில்லை எனக்கூறிய நீதிபதி, மீதமுள்ள 2 லட்சத்து 16 ஆயிரத்து 314 ரூபாயை நான்கு வாரங்களில் வழங்க அரசுக்கு உத்தரவிட்டார்.
மேலும் வயதான ஓய்வூதியதாரர்களுக்குச் சேர வேண்டிய மருத்துவச் சலுகைகளை வழங்காமலும், முறையாக நடத்தாமலும் இருப்பது குறித்து வேதனை தெரிவித்த நீதிபதி, அவசர காலங்களில், உயிரைக் காப்பாற்ற முயற்சிப்பார்களே தவிர, திட்டத்தில் இணைக்கப்பட்ட மருத்துவமனைகளைத் தேடிக்கொண்டு இருக்கமாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.
மூத்தக் குடிமக்கள் எப்படி நடத்தப்படுகிறார்களோ, அதைப் பொறுத்தே, மக்கள் நல அரசு மதிப்பிடப்படுகிறது என குறிப்பிட்ட நீதிபதி, எதிர்காலத்தில் மருத்துவச் செலவைத் திரும்பத்தரக்கோரி வரும் விண்ணப்பங்களை அலுவலர்கள் மனிதாபிமானத்தோடு பரிசீலிப்பார்கள் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
இதையும் படிங்க:சங்க கால புலவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படுமா? ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு