தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 2022-23ம் கல்வியாண்டுக்கு விலையில்லா காலனி வழங்கும் திட்டத்திற்காக 25 லட்சத்து 89 ஆயிரம் ஜோடி வெல்க்ரொ சாண்டல் காலணிகளை கொள்முதல் செய்ய 110 கோடியே 36 லட்ச ரூபாய் மதிப்பிலான இரண்டு டெண்டர்களை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி பணிகள் கழகம் ஜனவரி 29ஆம் தேதி அறிவித்தது.
இந்த டெண்டரில் பங்கேற்க தகுதியாக, ஒரு லட்சத்து 30 ஆயிரம் ஜோடி காலணிகளை அரசு அல்லது அரசு சார்ந்த நிறுவனங்கள் அல்லது உள்ளாட்சி அமைப்புகள் அல்லது பல்கலைகழகங்களுக்கு வினியோகித்திருக்க வேண்டும் என நிபந்தனை திருத்தப்பட்டது.
இதை எதிர்த்து ஜெய்ப்பூரை சேர்ந்த லெஹர் புட்வேர், மஹாவீர் பாலிமர், டெல்லியை சேர்ந்த பி.என்.ஜி. பேஷன்ஸ் ஆகியவை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தன. இந்த மனுக்களில், திருத்தப்பட்ட நிபந்தனைகளை ரத்து செய்து, தங்கள் நிறுவனங்களையும் டெண்டரில் பங்கேற்க அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தன.
இந்த வழக்குகள் நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, குறிப்பிட்ட 5 நிறுவனங்களை மட்டுமே பங்கேற்க வைக்கும் நோக்கில் நிபந்தனைகள் திருத்தப்பட்டதாகவும், தமிழக அரசை தவிர வேறு மாநில அரசுகள் வெல்க்ரோ காலணிகளை கொள்முதல் செய்வதில்லை என்றும் நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் ஏ.எல்.சோமயாஜி, நீரஜ் மல்கோத்ரா ஆகியோர் வாதிட்டனர்.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளை பின்பற்றுவதற்காகவே டெண்டர் நிபந்தனைகளில் திருத்தம் செய்யப்பட்டதாகவும், டெண்டரில் பங்கேற்காத நிலையில் அந்த நடைமுறைகளை எதிர்த்து மனுதாரர் நிறுவனங்கள் வழக்கு தொடர முடியாது என வாதிட்டார். மேலும், கோரிக்கையை பரிசீலிக்க கோரிய நிறுவனங்களின் மனுக்கள் அரசின் பரிசீலனையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
அரசு தரப்பு விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி அனிதா சுமந்த், டெண்டரை ரத்து செய்யக் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், நிறுவனங்கள் அரசை அணுகி மீண்டும் மனு அளித்தால் அவற்றை 4 வாரங்களுக்குள் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டுமென அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க : உக்ரைனில் ராணுவ நடவடிக்கை - புதின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு