சென்னை: தாயை சரியாக பார்த்துக் கொள்ளாத மகளுக்கு எழுதிக் கொடுக்கப்பட்ட சொத்தின் பத்திரத்தை வருவாய் அலுவலர் ரத்து செய்தது குறித்த உத்தரவை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
எத்தனையோ குடும்பங்களில் வசதியாக வாழ்ந்த பெற்றோர் பலர் ஆதரவை இழந்து முதியோர் இல்லங்களில் கண்ணீர் வடித்து வருகின்றனர். ஒரு சிலர் சாப்பாட்டுக்கே வழியின்றி யாசகம் பெற்று சாப்பிடும் நிலையையும் காணமுடிகிறது. பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் சொத்து பிரச்னை தொடர்பாக பல வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன.
பிள்ளைகள் பெற்றோரை நல்ல முறையில் பார்த்துக்கொள்வார்கள் என நம்பியே பெற்றோர்கள் தாங்கள் சம்பாதித்து சேர்த்து வைத்த சொத்துக்களை அவர்கள் பெயரில் எழுதி வைக்கின்றனர். சிறு வயதில் குழந்தைகளுக்கு இருக்கும் கடமை உணர்வு, வளர்ந்த உடன் பிள்ளைகளுக்கு வரவேண்டும். ஆனால் பிள்ளைகளோ முதுமைக்காலத்தில் பெற்றோரை மதிக்காமல் அவர்களை உதாசீனம் செய்கின்றனர்.
அத்தகைய ஒரு வழக்காக, தாயைப் பராமரிக்காத மகளுக்கு எழுதிக்கொடுத்த சொத்தின் பத்திரப் பதிவு உரிமையை ரத்து செய்த வருவாய் அலுவலரின் உத்தரவை, உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையைச் சேர்ந்தவர் ராஜம்மாள். இவரது மகள் சுகுணா. தாய் ராஜம்மாள் தமக்கு சொந்தமான சுமார் மூன்று ஏக்கர் நிலத்தை கடந்த 2016ஆம் ஆண்டு தனது மகளான சுகுணாவிற்கு எழுதி வைத்துள்ளார்.
அப்போது மகள் சொத்து பத்திரத்தைப் பதிவு செய்து பெற்றுக்கொள்வதற்கு முன்பாக தம் தாயை கவனித்துக்கொள்வதாக உறுதியளித்துள்ளார். ஆனாள், மகள் தன்னை கவனித்துக்கொள்ளாததால் ராஜம்மாள் பத்திரப்பதிவை ரத்து செய்யக்கோரி, உடுமலைப்பேட்டை தாலுகா வருவாய் அதிகாரியிடம் மனு அளித்துள்ளார். அதனை ஏற்றுக்கொண்ட வருவாய் அலுவலர், அந்த பத்திரப்பதிவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து சுகுணா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தாயை பராமரிப்பதாகக் கூறியதாலேயே சுகுணாவிற்கு சொத்து எழுதி வைக்கப்பட்டது. ஆனால், அந்த நிபந்தனையை அவர் மீறியதால் சொத்து பத்திரம் ரத்து செய்யப்பட்டதாக வருவாய் அலுவலர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, உரிய விசாரணைக்கு பின்னர் சட்டப்படியே சொத்து பத்திரம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், வருவாய் அலுவலரின் உத்தரவில் தலையிடத் தேவையில்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.