சென்னை: தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் மற்றும் ரேசிங் புரோமோ பிரைவேட் லிமிடட் ஆகியோர் இணைந்து நடத்தும், “ரேசிங் சர்க்யூட் ஃபார்முலா 4” கார் பந்தயம் சென்னையில் வரும் டிசம்பர் மாதம் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த போட்டி ஃபார்முலா 4 சர்வதேச இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் ஃபார்முலா 4 இந்தியன் ரேசிங் லீக் என இரண்டு விதமாக நடைபெறுகிறது.
இதில், பங்கேற்க லண்டன், ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சர்வதேச வீரர்கள் 12 பேர்களும் இந்திய வீரர்கள் 24 பேர்களும் கலந்துக் கொள்ள உள்ளனர். இந்த போட்டியானது மொத்தம் 4 சுற்றுகள் கொண்டவை. முதல் முன்று போட்டிகள் மெட்ராஸ் சர்வதேச கார்பந்தய மைதானத்தில் நடைபெறுகிறது. இறுதி போட்டி தான் சென்னையில், அதுவும் இரவு நேரத்தில், நகரத்தில் ஓட்டக்கூடிய “ரேசிங் சர்க்யூட் ஃபார்முலா 4” நடைபெறுகிறது.
இரவு நேரத்தில் நடைபெறும் இந்த கார் பந்தயதிற்காக, 240 கோடி செலவில், இதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. அதில், பிரத்யேக சாலை அமைக்க ரூபாய் 7 கோடிக்கு மேலாக நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில் 40 கோடியானது தமிழ்நாடு அரசும் 200 கோடி, ஸ்பான்சர்கள் மூலமாகவும் செய்யபடுகின்றன.
மேலும், பந்தயத்திற்கு ஏற்றார் போல சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது. இரவு, பகல் பாராமல் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அப்பகுதியில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, சுவாமி சிவானந்தா சாலை, தீவுத்திடல், அண்ணாசாலை பகுதி மற்றும் நேப்பியர் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நடைபாதைகள், தடுப்புகள் மற்றும் சாலைகள் அகற்றப்பட்டு, பந்தய தூரமான 3.5 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு சீரமைக்கப்பட்டு வருகிறது.
மேலும், இந்த பாதையில், 19 வளைவுகள் வருகின்றன. இதற்காக தீவுத் திடலில், அதனைச் சுற்றியுள்ள அண்ணா சாலை, சிவானந்தா சாலை, என தீவுத் திடலை சுற்றியுள்ள சாலைகளை பிரத்யேக சாலையை அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது.
டிக்கெட் விற்பனை: ஃபார்முலா 4 சர்வதேச இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் ஃபார்முலா 4 இந்தியன் ரேசிங் லீக் இரவு நேர கார் பந்தயங்களுக்கான டிக்கெட்டுகள், விற்பனையை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான டிக்கெட்டுகள் பெற விரும்புவோர் பேடிஎம் இன்ஸைடரில் ரூ.1699 இல் இருந்து ரூ.16999 வரை பணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் பல பிரிவுகளில் இரண்டு நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. மாலை 4 மணி முதல் டிக்கெட்டுகள் வாங்கியவர்கள் கார் பந்தயத்தை காண அனுமதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஹாக்கி விளையாட்டு போட்டியில் மதுரை ரயில்வே ஊழியர்கள் சாதனை!