சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடந்ந மாதம் பிளாஸ்மா வங்கியினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார். இதனைத் தொடர்ந்து கரோனாவிலிருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்யலாம் என வேண்டுகோள்வைக்கப்பட்டது.

இதையடுத்து கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 29 தீயணைப்பு வீரர்கள் தாமாக முன்வந்து பிளாஸ்மா தானம் வழங்கினர். இதனை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநர் சைலேந்திரபாபு, தீயணைப்புத் துறையின் வட மண்டல இணை இயக்குநர் பிரியா ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு பார்வையிட்டனர்.
அப்போது அவர்களிடம் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், "இதுவரை தமிழ்நாட்டில் 225 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சையானது செய்யப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களிலும் பிளாஸ்மா தானம் உள்பட அதன் சிகிச்சை காண ஏற்பாடுகள் விரைவுபடுத்திவருகிறது.
இன்னும் சில நாள்களில் அனைத்து மாவட்டங்களிலும் சிகிச்சைப் பெறும் அளவிற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. மேலும் பிளாஸ்மா தானம் தந்த தீயணைப்பு வீரர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்" எனத் தெரிவித்தார்.
இதுவரை பிளாஸ்மா வங்கியில் 140 பேர் பிளாஸ்மா தானம் செய்துள்ளனர். இதன்மூலம் 225 கரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'பிளாஸ்மா தானம் செய்ய இந்திய சுகாதார அமைப்பு ஒப்புதல்' - அமைச்சர் விஜயபாஸ்கர்!