சென்னை எண்ணூர் தாழங்குப்பம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் ராஜசேகர் (29). ரவுடியான இவருக்கு சந்தியா என்ற மனைவியும், அனுஷ்கா என்ற மகளும் ஒரு மகனும் உள்ளனர். இவர் மீது எண்ணூர், காசிமேடு மீன்பிடி துறைமுகம் காவல் நிலையங்களில் கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. வழிப்பறி வழக்கு ஒன்றில் சிக்கி சிறைக்கு சென்றுவிட்டு கடந்த வாரம்தான் ராஜசேகர் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு நான்கு பேருடன் சேர்ந்து மது குடித்துள்ளார். அப்போது குடிபோதையில் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ராஜசேகரை நான்கு பேரும் ஓட ஓட விரட்டி வெட்டி உள்ளனர். கத்திவாக்கம் நெடுஞ்சாலை, லாக் ரோடு சந்திப்பு நேருநகர் அருகேயுள்ள பக்கிங்காம் கால்வாயில் குதித்து ராஜசேகர் தப்பி ஓட முயன்றார். ஆனாலும் அவரை விடாது துரத்திச் சென்ற கும்பல், தலை கைகளில் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பலத்த காயமடைந்த ராஜசேகர் அதே இடத்தில் உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து எண்ணூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து ராஜசேகர் உடலை கைப்பற்றி உடற்கூராய்வு பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முன்விரோதம் காரணமாக ராஜசேகர் வெட்டிக் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:எதிர்பாராத நேரத்தில் காரில் அமர்ந்திருந்தவரை கத்தியால் குத்திய நபர் - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி