கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பொதுமக்கள் ஒன்றுகூடலைத் தவிர்க்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி பொது இடங்களில் அதிக மக்கள் கூடும் இடங்களான திரையரங்கு, வணிக வளாகம், டாஸ்மாக் உள்ளிட்ட இடங்களை மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தவிர நாடு முழுவதும் கல்வி நிறுவனங்களும் மூடப்படுகின்றன. இதுபோன்ற நேரத்தில் அலுவலகங்களில் பணியாற்றும் மக்களின் பாதுகாப்பு என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சமயத்தில் நேரில் வந்து பணியாற்ற வேண்டிய கட்டாயமில்லாத, கணினி, இணையதளம் மூலமாகவே செய்யக்கூடிய பணியை ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐடி நிறுவனங்களில் பலருக்கும் வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.
ஐடி நிறுவனங்களில் முற்றிலுமாக வீட்டிலிருந்தபடியே பணியாற்ற முடியாது. அதற்கான மடிக்கணினி, அதிவேக இணையதள வசதி தேவைப்படுவதால் அனைத்து இடங்களில் இது சாத்தியப்படாது எனக் கூறுகிறார்கள்.
அதேபோல் சில நிறுவனங்களில் முற்றிலுமாக வீட்டிலிருந்து பணியாற்ற அனுமதி அளிக்காமல் இரண்டு அல்லது மூன்று நாள்கள் வரையே அனுமதி கொடுப்பதாக ஊழியர்கள் தெரிவிக்கிறார்கள். இருப்பினும் ஐடி நிறுவனங்களில் உள்ள உணவு விடுதிகள், உடற்பயிற்சி கூடங்கள், கேளிக்கை விடுதிகள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன.
நேற்று காலைவரை சென்னையின் தொழில்நுட்பப் பகுதியான தரமணி, ஓஎம்ஆர் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் வழக்கம் போலவே இருந்துள்ளது. இனி வரும் நாள்களில் அதிக அளவிலான மக்கள் வீட்டிலிருந்தபடியே பணியாற்றுவார்கள் என்பதால் சென்னையின் குடியிருப்புப் பகுதிகளில் குறிப்பாக தரமணி, பெருங்குடி, ஓஎம்ஆர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாகக் குடியிருப்புவாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க... கரோனா நீ போயிரு தானா - சகோதரிகளின் விழிப்புணர்வு காணொலி வைரல்!