சென்னை: தமிழ்நாட்டில் வருகிற 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக திமுக, அதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள், வேட்பாளர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
மேலும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களும் வேட்பாளரை ஆதரித்துப் பரப்புரை செய்தனர். இந்நிலையில் இன்று (பிப்ரவரி 16) மாலை 6 மணியுடன் தேர்தல் பரப்புரை ஓய்ந்தது. இதனால், வேட்பாளர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அதன் தொடர்ச்சியாக தாம்பரம் மாநகராட்சியிலுள்ள 70 வார்டுகளிலும் திமுக, அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக கட்சி வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் கடைசி நாளான இன்று (பிப்ரவரி 17) தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். சில வேட்பாளர்கள் நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
தாம்பரம் மாநகராட்சி 50ஆவது வார்டில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் செல்வகுமார் 50ஆவது வார்டிலுள்ள பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளித்து வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது குழந்தை ஒன்றுக்கு சுயேச்சை என்று பெயர் சூட்டினார்.
அதேபோல் 53ஆவது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கோபி என்பவர் வீடு வீடாக நடந்துசென்ற தாம்பூலத் தட்டில் முகக்கவசம், கிருமிநாசினி உள்ளிட்டவை கொடுத்து வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
தாம்பரம் மாநகராட்சி 60ஆவது வார்டில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் வழக்கறிஞர் லட்சுமி என்பவர் வாக்குச் சேகரிப்பின்போது பொதுமக்கள் கொடுத்த உற்சாகத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கிட்கேட் சாக்லேட் கொடுத்து (இதுதான் தொலைநோக்குப் பார்வையோ!) வாக்குச் சேகரித்தார்.
அதேபோல் 50ஆவது வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கணேஷ் என்பவரை ஆதரித்து நடிகரும், பாஜக பிரமுகருமான காயத்ரி ரகுராம் வீடு வீடாக நடந்து சென்று மத்திய அரசின் திட்டங்களை விளக்கிக் கூறி வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
59ஆவது வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கங்கா தேவி என்பவர் ஆட்டோ ஓட்டிச் சென்றும், சாலையோர உணவகத்தில் பரோட்டா சுட்டும் வாக்குச் சேகரித்தார். மேலும், சுமார் 50 பெண்களுடன் இருசக்கர வாகனத்தில் பேரணியாகச் சென்று வாக்குச் சேகரித்தார்.
இதையும் படிங்க: அதிமுக, பாஜகவுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கும் ஸ்டாலின் - உதயநிதி