சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் 12ஆவது வார்டு பாலாஜி நகர் 1ஆவது தெருவில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி அனகாபுத்தூரிலிருந்து பம்மல் செல்வதற்கான முக்கிய பிரதான சாலையாக உள்ளது. இப்பகுதிகளில் சாலை ஓரங்களில் அமைக்கப்பட்டிருக்கும் கால்வாய்களில் இருந்து கழிவு நீர் நிரம்பி சாலையில் ஓடுகின்றன. இதனால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது மழை பெய்துவருவதால் கால்வாய்கள் நிரம்பி சாலையில் கழிவுநீர் நிரம்பி வீட்டிற்குள்புகுந்திடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்படும் என்றும் இதுகுறித்து அனகாபுத்தூர் நகராட்சி அலுவலர்களிடம் பலமுறை கூறியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்தப் பகுதியில் இருக்கும் சிலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்தப் பகுதியில் இருக்கும் கழிவுநீர் கால்வாய்களையும் நகராட்சி சார்பில் யாரும் சுத்தம் செய்யாமலும், கிருமி நாசினி தெளிக்காமல் அலட்சியமாகவும் நகராட்சி அலுவலர்கள் இருக்கின்றனர்.
இதனால் அப்பகுதி மக்கள் நோய் தொற்று பரவும் என்று அஞ்சி நகராட்சி அலுவலர்களிடம் எங்கள் பகுதியிலிருக்கும் கால்வாய்கள் சுத்தப்படுத்தி கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆனால் இன்றுவரை அனகாபுத்தூர் நகராட்சி சார்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர் என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.