தமிழ்நாட்டில், கரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் அருகாமையில் உள்ள மாவட்டங்களில் இந்தத் தொற்று பரவல் அதிதீவிரம் அடைந்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மாநில அரசு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் வரும் 30ஆம் தேதி வரை முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருள்களைத் தவிர மற்ற அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.
முழு ஊரடங்கு நேரத்தில், சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு, திருவனந்தபுரம், மதுரை, கோவை, தூத்துக்குடி, சேலம் உள்ளிட்ட இடங்களுக்கு வந்து செல்ல 64 விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதில், சுமார் ஐந்து ஆயிரத்து 350 பயணிகள் பயணிக்கின்றனர்.
சென்னை விமான நிலையத்திலிருந்து செல்லும் பயணிகள் தங்களுடைய விமானம் போர்டிங் பாஸ் காட்டி கால் டாக்சி புக் செய்து செல்கின்றனர். அதேபோல் விமான நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும், விமானநிலைய ஆணையத்தில் வழங்கப்பட்டுள்ள BCAS அடையாள அட்டையை காண்பித்து விமான நிலையத்திற்கு தங்களின் வாகனங்களில் வந்து செல்கின்றனர்.