குவைத்: ஏர் இந்தியா பயணிகள் விமானம் தினமும் இரவு 11:05 மணிக்கு குவைத்தில் இருந்து புறப்பட்டு காலை 6:55 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்து சேரும்.
அதை போல் ஏர் இந்தியா விமானம் நேற்று (ஜன.3) இரவு குவைத்தில் இருந்து 158 பயணிகளுடன் சென்னைக்கு புறப்பட தயாரானது. ஆனால் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அது சரி செய்து இரவு 11:05 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் தாமதமாக நள்ளிரவு 11:51 மணிக்கு குவைத்தில் இருந்து புறப்பட்டது.
அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும் போது விமானத்தில் மீண்டும் இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதை அடுத்து விமானி சென்னை மற்றும் குவைத் நாட்டின் விமான கட்டுப்பாட்டு அறைகளுக்கு அவசரமாக தகவல் கொடுத்தார்.
உடனே சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் விமானத்தை குவைத்திற்கே திருப்பி தரையிறங்கும்படி உத்தரவிட்டனர். அதன்படி அந்த விமானம் மீண்டும் குவைத் விமான நிலையத்தில் அவசரமாக தரை இறங்கி உள்ளது.
குவைத் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானத்தை பழுது பார்க்கும் பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது. இதை அடுத்து இன்று (ஜன.4) காலை 6:55 மணிக்கு சென்னை வந்து சேர வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம் இன்னும் வரவில்லை. தாமதமாக வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் குவைத்தில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் சென்னை வரும் பயணிகளை வரவேற்று அழைத்துச் செல்ல வந்தவர்கள் சென்னை விமான நிலையத்தில் தவித்துக் கொண்டு இருக்கின்றனர். அந்த விமானம் எப்போது வரும் என்ற முறையான தகவல் எதுவும் விமான நிலையத்தில் அறிவிக்கவில்லை.
இதையும் படிங்க: பெண் காவலரிடம் அத்துமீறிய திமுக நிர்வாகிகள் கைது.! கட்சியில் இருந்து இடைநீக்கம்..