சென்னை: சென்னை அடுத்த அம்பத்தூரில் நடந்த பெண் கொலை வழக்கு.. 5 பேர் கைது.. 2 பேருக்கு வலைவீச்சு..
அம்பத்தூரில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பட்டப்பகலில் நந்தினி என்ற பெண்ணை ஓட ஓட விரட்டி மர்ம கும்பல் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பி ஓடியுள்ளது. இதில் நந்தினி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து சம்பவ இடத்தில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை கைபற்றி விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் ஆறுமுகம், சீனு மற்றும் பாக்யராஜின் மனைவி லிடியா உட்பட 7 பேர் கொண்ட கும்பல் நந்தினியைக் கொலை செய்தது தெரிய வந்தது. இதனை அடுத்து ஆறுமுகம், சீனு, லிடியா, சூர்யா, ராஜி ஆகிய 5 பேரைத் தனிப்படை போலீசார், கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும், முன்விரோத காரணமாகவே இந்த கொலை நடந்தது என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னையில் ஒரே வாரத்தில் போதைப்பொருள் வழக்கில் 58 பேர் கைது..!
சென்னையில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கச் சென்னை காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி சென்னை மாநகரம் முழுவதும் போலீசார் கஞ்சாவுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தொடர்ந்து, கஞ்சா விற்பனை மற்றும் போதைப்பொருள் விற்பனையைத் தடுக்க சிறப்புத் தனிப்படை மற்றும் போலீசார்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும், சென்னையில் 34 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 58 பேர் கைது செய்துள்ளனர். மேலும் 52.9 கிலோ கஞ்சா, மற்றும் 2 கிராம் மெத்தாம்பேட்டமைன் மற்றும் 1,838 போதை மாத்திரைகள் கையபற்றபட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் திமுக நிர்வாகிகளைத் தாக்கிய பாஜக நிர்வாகிகள்..!
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை கொருக்குப்பேட்டை அண்ணாநகர் பகுதியில் தமிழக அரசின் வெள்ள நிவாரணத் தொகை 6000, வழங்குவதைக் கடுமையாக விமர்சனம் செய்யும் வகையில் பேனர் ஒன்றை, பாஜக-வை சேர்ந்த 6 நிர்வாகிகள் பொதுமக்கள் மத்தியில் வைத்துள்ளனர்.
இது குறித்து திமுக-வை சேர்ந்த காளிதாஸ் என்பவர் ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்து அந்த பேனர் அகற்றப்பட்டது. இதன் முன் பகை காரணமாக பாஜக-வை சேர்ந்த 6 நிர்வாகிகளும், நேற்று (டிச 18) இரவு கொருக்குப்பேட்டை சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் காளிதாஸ், 41வது வட்ட துணைச் செயலாளரான முருகேசன் என்பவருடன் பேசிக் கொண்டிருந்த போது அவர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், ஆத்திரமடைந்த 6 பேர் கொண்ட பாஜக கும்பல், பீர் பாட்டிலை உடைத்து காளிதாசின் இடுப்பில் குத்தியுள்ளனர் மேலும் மற்றொரு திமுகவினரான முருகேசனை மறைத்து வைத்திருந்த கட்டையால் சர மாரியாகத் தாக்கியுள்ளனர். இதனை அடுத்து, இரத்த காயங்களுடன் இருந்த இருவரை அந்த பகுதி மக்கள் இரு வரையும் மீட்டு 108 ஆம்புலன்சில் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.
மேலும், ஸ்டான்லி மருத்துவமனையில் இருவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து ஆர்.கே.நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் ரூ.65 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்!