கரோனா ஊரடங்கினால் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பெற்றோர் பலரும் தற்போது தனியார் பள்ளிகளைத் தவிர்த்து மாநகராட்சிப் பள்ளிகளை நாட தொடங்கியுள்ளனர்.
மாநகராட்சிப் பள்ளிகளை நாடும் பெற்றோர்
இந்த சூழலில் மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை மேலும் அதிகரிப்பதற்காக மாநகராட்சி ஆசிரியர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், வித்தியாசமான முயற்சி ஒன்றை மேற்கொண்டு பெற்றோர்களையும், மாணவர்களையும் ஒருங்கே அசத்துகின்றனர் மாநகராட்சி ஆசிரியர்கள்.
தாம்பூலத் தட்டு வைத்து வரவேற்கும் ஆசிரியர்கள்
அதன்படி, சென்னை மாநகராட்சியில் வீடுவீடாக சென்று தாம்பூலத் தட்டில் பழங்கள், வெற்றிலை, பாக்கு வைத்து, தங்கள் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்குமாறு துண்டு பிரசுரங்கள் வழங்கி அழைப்பு விடுத்து வருகின்றனர். தவிர மாணவர்கள் சேர்க்கைக்காக தனியாக சிறப்பு சேர்க்கை முகாம்கள் நடத்தியும், வேறு சில புதிய முயற்சிகளையும் மாநகராட்சி ஆசிரியர்கள் மேற்கொண்டு கவனம் ஈர்த்து வருகின்றனர்.
”நீங்கள் தைரியமாக மாநகராட்சிப் பள்ளிகளில் உங்கள் பிள்ளைகளை சேர்த்து படிக்க வைக்கலாம்” எனவும் பெற்றோர்களை ஆசிரியர்கள் ஊக்குவித்து வருகின்றனர்.
அதிகரித்துள்ள மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை
ஜூன் 14ஆம் தேதி தொடங்கி மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. சென்னை மாநகராட்சியின் கீழ் 119 ஆரம்பப் பள்ளிகள், 92 நடுநிலை பள்ளிகள், 38 உயர்நிலைப் பள்ளிகள், 32 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 281 பள்ளிகள் இயங்கி வருகின்றன.
கடந்த ஜூலை 2ஆம் தேதி நிலவரப்படி சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 93,445 மாணவர்கள் சேர்ந்திருப்பதாகவும், இதில் 18,991 மாணவர்கள் புதிதாக சேர்ந்திருப்பதாகவும், தனியார் பள்ளிகளில் இருந்து வெளியேறி அரசுப் பள்ளிகளில் 12,477 மாணவர்கள் சேர்ந்திருப்பதாகவும் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
’தமிழர் மரபு படி வரவேற்கிறோம்’
இச்சூழலில் இதுதொடர்பாக நம்மிடம் பேசிய மாநகராட்சி உதவி கல்வி அலுவலர் பக்தப் பிரியா, "மாநகராட்சி பள்ளிகளில் சேர்க்கை அதிகரித்துவரும் நிலையில் தேனாம்பேட்டை மாநகராட்சி ஆசிரியர்கள் தமிழர் மரபுப்படி வீடுவீடாக சென்று தாம்பூலத் தட்டு, பழங்கள் வைத்துக்கொடுத்து, அரசு பள்ளிகளில் சேர்க்குமாறு கோரி துண்டுப்பிரசுரம் வழங்கி வருகின்றனர்.
மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க ஸ்மார்ட் கிளாஸ், யோகா பயிற்சி, விளையாட்டு பயிற்சி என அனைத்து பயிற்சிகளும் மாநகராட்சிப் பள்ளிகளில் வழங்கப்படுகின்றன. இதனால் தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்த முடியாத பெற்றோர் தைரியமாக மாநகராட்சிப் பள்ளிகளில் சேர்க்கலாம்" எனத் தெரிவித்தார்.
வெளிநாடு, மாநிலங்கள் சென்று சாதனை படைக்கும் மாணவர்கள்
இவை தவிர, மாநகராட்சி மற்றும் ரோட்டரி கிளப் சேர்ந்து ஆண்டுக்கு ஒரு முறை நடத்தும் ’விங்ஸ் டு பிளை’ (wings to fly) திட்டத்தின் கீழ் மாணவர்கள் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களுக்கு அழைத்து செல்கின்றனர். கரோனா என்பதால் கடந்த ஆண்டு மாணவர்களை அழைத்து செல்லவில்லை. முன்னதாக 2018ஆம் ஆண்டு மாநகராட்சி எட்டு மாணவர்களை நாசாவிற்கு அழைத்துச் சென்றது.
நாசா சென்ற மாநகராட்சிப் பள்ளி மாணவர்
இந்த மாணவர்களில் ஒருவராக நாசாவுக்கு சென்ற ஆதவன் இது குறித்து நம்மிடம் பேசுகையில், "மாநகராட்சி மற்றும் ரோட்டரி கிளப் சேர்ந்து நடத்திய போட்டியில் குரோமடோகிராபி (Chromatography) என்ற ஆய்வில் வெற்றி பெற்று, 15 நாள்கள் அமெரிக்காவில் உள்ள நாசாவிற்கு நான் சென்றேன். அங்கு டேவிட் என்ற விண்வெளி வீரரை சந்தித்தோம்.
அது எங்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது. என்னை ஊக்குவித்து அனைத்து செலவையும் எனது ஆசிரியர்கள் ஏற்றனர்" என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
ஒரு காலத்தில் சரியாக படிக்கவில்லை என்றால் கார்ப்பரேஷன் பள்ளியில் சேர்த்துவிடுவேன் என ஏளனப்படுத்தப்பட்ட பள்ளியை மக்கள் தற்போது நாட தொடங்கியுள்ளது. இந்த கரோனா காலத்தில் நிகழ்ந்த சிறப்பான மாற்றங்களுள் ஒன்று. இந்த சிறப்பான மாற்றத்துக்கு வித்திட்டு பெற்றோர்களையும், மாணவர்களையும் ஒருங்கே ஊக்குவித்து வரும் மாநகராட்சி ஆசிரியர்கள் நிச்சயம் பாராட்டுக்குரியவர்கள்!
இதையும் படிங்க: ஒருபுறம் விவசாயம், மறுபுறம் கற்பித்தல் பணி: எடுத்துக்காட்டாக திகழும் அரசுப் பள்ளி ஆசிரியர்!