சென்னை: சென்னை சென்ட்ரலில் அமைந்துள்ள விக்டோரியா மஹால் அரங்கின் உட்புற தடுப்புகள், தேக்குமர கதவுகள், படிக்கட்டுகள், பார்வையாளர் மாடம், மேல் தளம், சீன செராமிக் மேற்கூரை உள்பட அனைத்தும் பராமரிப்பின்றி, சேதமடைந்து காணப்படுகின்றன.
கடந்த 1887ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த அரங்கிற்கு, இங்கிலாந்து மகாராணி விக்டோரியாவை நிறைவுக்கூறும் விதமாக, அவரது பெயரே சூட்டப்பட்டது.
புனரமைத்து அருங்காட்சியகமாக மாற்ற திட்டம்
சென்னையில் பல்வேறு பொது நிகழ்ச்சிகளை நடத்த அரங்கம் தேவை என்பதைக் கருத்தில் கொண்டு, சுமார் ரூ. 16 ஆயிரம் நிதிதிரட்டி விக்டோரியா மஹால் கட்டப்பட்டதாக வரலாற்று தரவுகள் தெரிவிக்கின்றன.
சுதந்திரத்துக்கு பின்னர் 1968இல் அண்ணா முதலமைச்சராக இருந்தபோது, விக்டோரியா அரங்கிற்கு நிதி ஒதுக்கி புதுப்பித்தார். இதனைத் தொடர்ந்து கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது கடந்த 2009ஆம் ஆண்டு, அரங்கை புதுப்பிக்க நிதி ஒதுக்கப்பட்டது.
ஆனால், அதன் பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விக்டோரியா அரங்கு புதுப்பிக்கப்படாமல் கைவிடப்பட்டது. தற்போது சென்னையின் புராதன கட்டடங்களை புனரமைக்கும் பணியை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
அதன்படி சிறப்புமிக்க விக்டோரியா அரங்கை சுமார் ரூ. 28 கோடி செலவில் பழமை மாறாமல் புதுப்பித்து, அருங்காட்சியகம் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒலிம்பிக்கில் பங்கேற்ற தமிழ்நாடு வீரர்களுக்கு அரசு வேலை- அமைச்சர் மெய்யநாதன்