சென்னை: அதிமுக ஆட்சியில் தனியார் நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் பள்ளிகளில் செய்த வரி ஏய்ப்பு முறைகேடு காரணமாக சென்னை மாநகராட்சிக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனை சிறப்புக் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கணக்கு குழுத் தலைவர் தனசேகரன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை மாநகராட்சி ஏப்ரல் மாதத்திற்கான மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று (ஏப்.28) கூடியது. அப்போது நேரமில்லா நேரத்தில் பேசிய கணக்கு குழுத் தலைவர் தனசேகரன், "சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்கள் சொத்து வரி ஏய்ப்பு செய்துள்ளன. அதற்கு நோட்டீஸ் வழங்கியும் ஒரு மாதம் ஆகியும் பதில் அளிக்கவில்லை. அதிமுக ஆட்சியில் 50 சதவீதம் வரி குறைப்பு செய்துள்ளனர்.
குறிப்பாக, ஆலந்தூரில் இயங்கிவரும் "ரேடிசன் ப்ளூ ஜி.ஆர்.டி" ஹோட்டலின் சொத்துவரியை ஆய்வு செய்ததில், 2018-2019 நிதியாண்டு முன் வரை அரையாண்டு வரி ரூ.57,41,410-ஆக இருந்தது. அதன் பின்னர், ரூ.19,43,025 எனக் குறைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 66% குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது.
அதே ஆலந்தூரில் செயல்பட்டு வரும் "தி விஜய் பார்க்" (The Vijay Park) ஹோட்டலின் 2018-19 நிதியாண்டு அரையாண்டு சொத்துவரி ரூ.6,56,515 ஆக இருந்து ரூ. 5,18,120 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. துரைப்பாக்கத்தில் இயங்கிவரும் "பார்க் பிளாசா ஹோட்டலின் 2018-19 நிதியாண்டு அரையாண்டு சொத்துவரி ரூ. 44,97,605 இருந்து ரூ.14,22,205- ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இது போல இன்னும் 8 கிராண்ட் ஹோட்டல்களில் வரிகளும் பல மடங்கு குறைக்கப்பட்டுள்ளது.
2018-2019 ஆண்டில் வரி வருவாயில் அதிமுக ஆட்சியில் இழப்பு ஏற்பட்டுள்ளது. இத்தனை தொகையினையும் மீண்டும் பெற வேண்டும். இந்த முறைகேட்டை தடுக்க கமிட்டி அமைக்க வேண்டும். கடந்த அதிமுக ஆட்சியில் அழுத்தத்தின் காரணமாக அதிகாரிகள் இவ்வாறு செயல்பட்டு உள்ளனர்.
அதுமட்டுமின்றி சென்னையில் பல தனியார் பள்ளிகள் அனுமதி பெறாமல் பல கட்டடங்கள் ஆடிட்டோரியம், நீச்சல் குளங்கள் கட்டியுள்ளன; இது குழந்தைகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவும் இருக்கிறது; அதனால், அனைத்து தனியார் பள்ளிகளின் கட்டடங்களை முழுமையாக ஆய்வு செய்து முறையாக கட்டட அனுமதியும் சொத்து வரியும் போடப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்ய அனைத்து மண்டல அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்' என கோரிக்கை வைத்தார்.
இதற்குப் பதிலளித்த ஆணையர் ககன் தீப் சிங் பேடி, 'சென்னையில் உள்ள ஹோட்டல், சினிமா தியேட்டர், மருத்துவமனை, திருமண மண்டபம் ஆகியவற்றிற்கு வணிக ரீதியாக சொத்து வரி விதிக்கப்பட்டுள்ளது. இதில் சிலவற்றுக்கு குறைத்தும், சில நிறுவனங்களுக்கு அதிகமாகவும் வசூலிக்கப்பட்டுள்ளது. இதனால், வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் சிறப்புக் குழு அமைத்து இந்த முறைகேடு குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 6 பொறியியல் கல்லூரிகள் மூடப்படுகிறதா? - மவுசு குறைகிறதா..பின்னணி!