கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நோய் தடுப்புப் பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சென்னையில் கரோனா தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
கரோனா பரவலைத் தடுக்க தூய்மைப் பணியாளர்களும் சுகாதாரப் பணியாளர்களும் சென்னையின் அனைத்து மண்டலங்களுக்கும் வீதி வீதியாகச் சென்று கிருமி நாசினி தெளிப்பது, வீடுகள்தோறும் சென்று பரிசோதனை, கணக்கெடுப்பு, விழிப்புணர்வு ஏற்படுத்துவது என அனைத்துவித தடுப்புப் பணிகளையும் துரிதகதியில் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனாலும் கரோனாவின் தாக்கம் குறைந்தபாடு இல்லை. நேற்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் மொத்தம் 509 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் கரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மக்கள் அவரவர் உடல் நலம் குறித்து சுய பதிவு செய்யும் இணையதளம் ஒன்றை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது.
covid19.chennaicoporation.gov.in/c19/symptoms/ என்கின்ற இந்த இணையதளத்தில், பெயர், வயது, முகவரி, தொடர்பு கொள்ளும் எண், கரோனா அறிகுறிகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை உள்ளீடு செய்யும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
சென்னை மக்கள் அனைவரும் தங்கள் உடல் நலம் குறித்து இந்த இணையதளத்தில், தாமாக முன்வந்து சுய பதிவு செய்ய வேண்டுமென சென்னை மாநகராட்சி பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதையும் படிங்க : 'கரோனா போரில் சிப்பாய்கள் போல மக்கள் செயல்பட வேண்டும்'