சீனாவின் வூகான் மகாணத்தில் உருவானதாகக் கூறப்படும் கொரோனா வைரஸ் உலகம் முழுமையாகப் பரவி ஆயிரக்கணக்கானோர் இறந்துள்ளனர். பல ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. தற்போது, இதன் தாக்கம் இந்தியாவிலும் ஏற்பட்டதன் விளைவாக டெல்லி, கர்நாடக மாநிலங்களில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் பலர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவிவருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும்விதமாகச் சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்களுக்கு மருத்துவம் பார்த்துவருகின்றனர்.
மேலும், பொதுமக்கள் அதிகம் தொட்டுப் பயன்படுத்தும் கைப்பிடிகள், பேருந்து நிலைய இருக்கைகள், ஏ.டி.எம். மையங்கள், அலுவலக கணினிகள் உள்ளிட்ட அனைத்தையும் நோய் தொற்று பரவாதபடி சுத்தப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல், நகரப் பேருந்துகளும் சுத்தம் செய்யப்பட்டுவருகின்றன. சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவின்பேரில் அனைத்துத் தரப்பு அலுவலர்கள், ஊழியர்கள் இன்று காலை முதலே சுத்தப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதையும் படிங்க:கொரோனா வைரஸ்: சிங்கப்பூரிலிருந்து திரும்பியவர் மருத்துவமனையில் அனுமதி