கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சென்னை மாநகராட்சி கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுவருகிறது. நகரின் பல்வேறு பகுதிகளுக்கு கிருமி நாசினி தெளிக்க போதிய இயந்திரங்கள் இல்லை என கூறப்பட்டு வந்த நிலையில், கனரக வாகனம் மூலமாக வேகமாகவும் அதே சமயத்தில் பரவலாகவும் கிருமி நாசினி தெளிக்கும் 75 ஜெட்ராடிங் வாகனங்களின் சேவையை ரிப்பன் மாளிகையில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கிருமி நாசினி ஜெட்ராடிங் வாகனம் திறந்த நிலையங்களான கடற்கரைகள், பேருந்து நிலையங்கள், கோயில்கள், மக்கள் அதிகமாக கூடும் இடங்கள், அரசு அலுவலகங்கள் போன்ற இடங்களில் பயன்படுத்தப்படும். 75 ஜெட்ராடிங் வாகனங்கள் பணிக்காக எடுத்து ஒரு மண்டலத்துக்கு 5 வாகனம் என்ற அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிக்காக குடிநீர் வாரியத்திடமிருந்து லாரிகள் பெறப்பட்டுள்ளன. இதுதவிர சென்னை மாநகராட்சி சார்பில் வீடு வீடாக சென்று பொது மக்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் இருக்கிறதா என்ற தகவல்களை சேகரித்து வருகிறோம். மக்களுக்கு தேவையான அளவுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறோம். நடைபாதையில் தங்கி இருக்கும் மக்களை சமுதாயக்கூடங்களில் தங்கவைத்து முறையான உணவு அளிக்கப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: 'நோயற்ற வாழ்வே, குறைவற்ற செல்வம் என்பதை உணர்த்தும் நேரம் இது' - கமல் அறிவுறுத்தல்