சென்னை: சென்னையை அடுத்த பெரும்பாக்கத்தில் புதிய எஸ்-16 காவல் நிலையத்தை சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் இன்று (டிச.17) திறந்துவைத்தார். சென்னை பள்ளிக்கரணை காவல் நிலைய கட்டுப்பாட்டில் இருந்த பெரும்பாக்கம், சித்தாலப்பாக்கம், ஒட்டியம்பாக்கம் ஆகிய பகுதிகளை பிரித்து புதிய காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
பெரும்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள புதிய காவல் நிலையத்தை திறந்து வைத்த காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், காவல் நிலையத்தின் கல்வெட்டினையும் திறந்து வைத்தார்.
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்த காவல் நிலையம் இப்பகுதி மக்களின் பாதுகாப்பு அரணாக செயல்படும். மேலும் பொதுமக்கள் அனைவரும் காவல் துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இங்கு சுமார் நூறு காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இங்கிருக்கும் பொதுமக்களுக்கு காவல் துறை தொடர்ந்து சேவை செய்யும்" என்றார்.
இதனையடுத்து, காவல் நிலைய வளாகத்தில் செடிகளை நட்டு வைத்தார். இந்த திறப்பு விழாவில் கூடுதல் ஆணையர் தினகரன், இணை ஆணையர் பாபு உள்ளிட்ட காவல் துறை உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: நீதிமன்றங்களை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைக்கிறார் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி!