சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் நேற்று(அக். 13) கல்லூரி மாணவி சத்யா ஓடும் ரயில் முன் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சதீஷ் என்பவர் தேடப்பட்டுவந்த நிலையில் கிழக்கு கடற்கரை சாலையில் நள்ளிரவில் அவர் கைது செய்யப்பட்டு, 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளனர்.
இந்நிலையில் மகள் இறந்த துக்கம் தாங்காமல் தொடர்ந்து சத்யாவின் தந்தை மாணிக்கம் மது அருந்தியதாக கூறப்படுகிறது. காரில் அமர்ந்த நிலையில் இருந்த மாணிக்கம் திடீரென மயக்கம் அடைந்ததால் உறவினர்கள் சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு முதற்கட்டமாக மகள் உயிரிழந்ததால் சோகத்தில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
மாணவியின் தந்தை தற்கொலை: பின்னர் மருத்துவர்கள் ஆய்வு செய்ததில், மதுவில் விஷம் ஊற்றி குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் காவல்துறையினர் விசாரணையில் மாணிக்கம் மதுவில் மயில் துத்தம் எனும் கொடிய விஷயத்தை கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்துள்ளது.
இது குறித்தும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் மகள் சத்யா வைக்கப்பட்ட பிரேதப்பரிசோதனை அறையிலேயே, தந்தை மாணிக்கத்தின் உடலும் பிரேதப்பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் மாணவியின் தாயாரும் பெண் தலைமைக்காவலருமான ராமலட்சுமி புற்றுநோய் காரணமாக சிகிச்சைப் பெற்று வருகிறார்.
காவல்துறையின் அலட்சியப்போக்கு: இந்நிலையில் கொலை நடந்ததற்கு முன்னதாக சதீஷ், சத்யா இருவருக்கும் நடந்த பிரச்னை தொடர்பாக மூன்று முறை காவல் நிலையத்திற்குச்சென்று புகார் அளித்துள்ளனர்.
குறிப்பாக கடந்த 2 மாதங்களாக சத்யாவிற்கும், சதீஷிற்கும் இடையே பிரச்னை நிலவி வந்துள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பு தியாகராய நகரில் சத்யா படிக்கும் கல்லூரிக்குச்சென்ற சதீஷ், கையைப்பிடித்து இழுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மாம்பலம் காவல்துறையினர் அவரை பிடித்து, இந்திய தண்டனைச்சட்டம் 75 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து சமாதானம் பேசி அனுப்பி வைத்துள்ளனர்.
அதேபோல சத்யா வீட்டின் முன்பு குடித்துவிட்டு, சதீஷ் அவரது குடும்பத்தினருடன் சண்டையிட்ட போதும் காவல் துறையினர் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். இதேபோல மொத்தம் 3 முறை சத்யாவிடம் வம்பிழுத்த வழக்கில் சதீஷ், காவல் நிலையம் வரை சென்றபோது இரு குடும்பத்தினரையும் காவல் துறையினர் அழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.
இவ்வாறாக, காவல் துறையினரின் அலட்சியத்தால் தற்போது காவலரின் குடும்பமே சிதைந்து போயுள்ளதாக ஒருபக்கம் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையும் படிங்க:பரங்கிமலை கொலை வழக்கு... வாக்குமூலத்தில் திடுக்கிடும் தகவல்கள்...