கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அவர்களின் வீடுகளுக்குச் சென்று தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் வழங்குமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் 15இல் தொடங்கி ஜூன் 25ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. தேர்வுகளை எழுதவுள்ள அனைத்து மாணவர்களும் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளைத் தேர்வுத் துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
மேலும், மாணவர்கள் தங்கள் பள்ளித் தலைமை ஆசிரியரைத் தொடர்புகொண்டு தங்களது தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் அல்லது தேர்வுத் துறை இணையதளத்திற்குச் சென்று தங்களது தேர்வு எண், பிறந்த தேதி, ஆகியவற்றினை இணையதளம் மூலம் பதிவுசெய்து தாங்களாகவே தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
தேர்வுகள் தொடர்பான விவரங்களை அறிய, தேர்வுக்கூட நுழைவுச்சீட்டின் கீழ்ப்பகுதியில் அச்சிடப்பட்டுள்ள அலைபேசி எண்களைத் தொடர்புகொள்ளலாம்.
பள்ளிகளில் மாணவர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் வழங்கிடும்போது மாணவர்களுக்கான நேர அட்டவணையைத் தெரிவித்து, தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்திடும் வகையில் கட்டம் வரைந்து, அதற்குள் நிற்கவைத்து பாதுகாப்பாக தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை வழங்க வேண்டும்.
மேலும் நோய்க்கட்டுப்பாட்டுப் பகுதியில் வசிக்கும் மாணவர்கள், வெளியூரிலிருந்து வந்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மாணவர்களுக்குரிய தலைமை ஆசிரியர் மூலம் அவர்களது வீடுகளுக்கே சென்று தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : காவிரி மேலாண்மை ஆணையத்தில் மேகதாது அணை பிரச்னை எழுப்ப திட்டம்