சவீதா மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனத்தின் 15ஆவது இணையவழி பட்டமளிப்பு விழாவில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு காணொலி மூலம் உரையாற்றினார்.
அப்போது பேசிய முதலமைச்சர் பழனிசாமி, மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக உள்ளது. இந்தியாவின் மருத்துவ சுற்றுலா தலமாக தமிழ்நாடு உள்ளது. அரசின் நடவடிக்கையால் கர்ப்பிணிகள் உயிரிழப்பு குறைக்கப்பட்டுள்ளது. உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அர்ப்பணிப்பு, பொதுமக்கள் சேவைக்கான முழுமையான உணர்வுகளையும், சிறந்த தொழில் திறமைகளையும் கொண்ட மருத்துவர்களை உருவாக்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றார் முன்னாள் முலமைச்சர் ஜெயலலிதா.
அதனடிப்படையில், மாணவர்கள் பெற்ற கல்வியை சமூக நலனுக்குப் பயன்படுத்தவும், சமூகத்தின் அறிவுசார்ந்த நிலையை உயர்த்தவும் பல்கலைக்கழகங்கள் தான் உறுதுணையாக உள்ளன. இந்த நோக்கங்களின் அடிப்படையில்தான் இந்த நிகர்நிலைப் பல்கலைக்கழகம், மாணவர்களுக்கு சிறந்த கல்வி அளித்து சிறந்த மருத்துவர்களாகவும், சிறந்த பொறியாளர்களாகவும், பிற துறை வல்லுநர்களாகவும் உங்களை உருவாக்கி வருகிறது.
இந்த பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறும் அனைத்து மாணவர்களுக்கும் எனது பாராட்டுதல்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழ்நாடு ஐந்து வருடங்களாக தொடர்ந்து தேசிய அளவில் மிகச் சிறந்த மாநில விருதைப் பெற்று வருகிறது. உடல் உறுப்பு தானத்தில் சிறந்த மருத்துவமனைக்கான விருது, சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது.
மூளைச்சாவு அடைந்தவரிடம் இருந்த கைகளை தானமாக பெற்று, திண்டுக்கல்லை சார்ந்த நாராயணசாமி என்பவருக்கு பொருத்தி நாட்டிலேயே முதல் முறையாக கைகள் மாற்று அறுவை சிகிச்சை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் செய்யப்பட்டது. தற்போது தமிழ்நாட்டிலுள்ள 3 ஆயிரத்து 250 மருத்துவப் படிப்பு இடங்களுடன், 11 மருத்துவக் கல்லூரிகளுக்கான 1,650 புதிய மருத்துவப் பட்டப்படிப்பு இடங்களை சேர்த்து 2021-22ஆம் ஆண்டு முதல், மாணவர் சேர்க்கை நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவராகும் கனவினை மெய்ப்பிக்கும் வகையில் 6 முதல் 12 வரை அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் உள் ஒதுக்கீடாக 7.5 விழுக்காடு வழங்க ஜெயலலிதாவின் அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.