சென்னை: வங்கி கணக்குடன் பான் கார்டை இணைக்க வேண்டும் எனக்கூறி பெண்ணின் வங்கி கணக்கிலிருந்து 5 ஆயிரம் ரூபாய் சுருட்டிய நபருக்கு போலீசார் வலைவீச்சு. விருகம்பாக்கம் ராஜேஷ்வரி காலனியை சேர்ந்தவர் சுகுணா (வயது 38). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் பேங்கில் கணக்கு உள்ளது. இந்த நிலையில் நேற்று சுகுணாவின் செல்போன் எண்ணிற்கு வங்கியில் இருந்து ஒரு குறுஞ்செய்தி உள்ளது.
அதில் உங்கள் வங்கி கணக்கில் உடனடியாக பான் கார்டை இணைக்க வேண்டும் எனவும் இல்லையென்றால் வங்கி கணக்கு முடக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. உடனே சுகுணா அந்த குறுஞ்செய்தியில் வந்த லிங்க் மூலமாக சென்று பான் கார்டை இணைத்து உள்ளார். உடனே அவரது வங்கி கணக்கில் இருந்து 5 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டு உள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சுகுணா சம்பந்தப்பட்ட வங்கிக்குச் சென்று இது குறித்து கேட்ட போது போலியான குறுஞ்செய்தி என அவர்கள் தெரிவித்து உள்ளனர்.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுகுணா இந்த சம்பவம் குறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் மோசடி உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கேரள பேராசிரியர் ஜோசப் கை வெட்டப்பட்ட வழக்கு - 6 பேர் குற்றவாளிகள் என என்ஐஏ நீதிமன்றம் தீர்ப்பு!
மின்சாரம் தாக்கியதில் வாலிபர் காயம்: சென்னையில் மெட்ரோ ரயில் பணிக்காக பள்ளம் தோண்டிய போது மின்சாரம் தாக்கி வட மாநில வாலிபர் தீக்காயம் அடைந்துள்ளார். சென்னை தேனாம்பேட்டை சேமியர்ஸ் ரோடு அருகே மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்தப் பணியில் அதிகப்படியான வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை ஜார்கண்ட் மாநிலம் பெங்கலாபாத்கண்டி பகுதியைச் சேர்ந்த ராமுபுஜகர் (வயது 25) என்ற தொழிலாளி கிளப்பிங் இயந்திரம் மூலம் சாலையில் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக சாலையின் கீழ் பதிக்கப்பட்டிருந்த மின்சார கேபிளில் இயந்திரம் பட்டு மின்சாரம் தாக்கியதில் ராமுபுஜகர் காயம் அடைந்தார். உடனே சக ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தியாகராய நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு 20 சதவீதம் தீக்காயம் அடைந்த ராமுபுஜகருக்கு மருத்துவர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் இவ்விபத்து குறித்து அபிராமபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கொடநாடு வழக்கு; கைப்பற்றப்பட்ட செல்போன்கள் உள்ளிட்டவை நீதிமன்றத்தில் ஒப்படைப்பு!