கடன் தொல்லை காரணமாக தற்கொலை: திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்தவர் ராஜன் (52). இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். இவர் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல அரசு மருத்துவமனையில் மருந்தாளுனராக கடந்த 5 வருடங்களாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இன்று (ஜூலை 03) காலை வழக்கம் போல பணிக்குச் சென்ற ராஜன் அவரது அறையிலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
![கடன் தொல்லை காரணமாக தற்கொலை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/03-07-2023/18905113_sui.jpg)
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக ஊழியர்கள் இது குறித்து எழும்பூர் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன், பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் தற்கொலை செய்து கொண்ட ராஜனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், அவரது அறையில் ராஜன் இறப்பதற்கு முன்பாக எழுதி வைத்த கடிதத்தை காவல் துறையினர் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் தனக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்ததால் தற்கொலை செய்து கொண்டதாகவும் தன்னை மன்னித்துக்கொள்ளுங்கள் எனவும் எழுதப்பட்டிருந்தது.
![தற்கொலை எதற்கும் தீர்வல்ல](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/03-07-2023/18905113_suicide.jpg)
இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக இறந்த ராஜனின் மகள் சுகன்யா அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், கடன் தொல்லை காரணமாக ராஜன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக எழும்பூர் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணியிடம் சில்மிஷம்... மகளிர் ஆணையம் கடும் கண்டனம்!
மாடியில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு: சென்னை வடபழனி 100 அடி சாலையில் லீ கிளப் என்னும் பிரபல நட்சத்திர விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதி, கிளப் நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் உறவினருக்குச் சொந்தமானதாகும். மேலும், இந்த கிளப் வளாகத்தில் 7 ஆயிரம் சதுர அடியளவில் இரண்டு அடுக்கு மாடிக்கொண்ட புதிய கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. வடமாநில தொழிலாளர்கள் பலர் இங்கு தங்கி கட்டிட பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று (ஜூலை 03) அதிகாலை உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த விஜய் (23) என்ற இளைஞர் பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுப்பட்டிருந்தபோது 2 ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார்.
![மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/03-07-2023/18905113_thu.jpg)
உடனே அங்கிருந்த ஊழியர் முத்தையா என்பவர் சூளைமேடு காவல் துறையினருக்குத் தகவல் அளித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், உயிடிழந்தவரின் சடலத்தை மீட்டு உடற்கூராவுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: Viral Video: சென்னை புறநகர் ரயிலில் இளைஞர்கள் அட்டகாசம்.. பயணிகளை அச்சுறுத்திவிட்டு தப்பி ஓட்டம்!