சென்னை: சென்னை மாநகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு 13 வயதில் மகள் உள்ளார். இவர், தனியார் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார். தாயும், மகளும் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் இயங்கி வரும் உடற்பயிற்சி கூடத்திற்கு தினந்தோறும் சென்று உடற்பயிற்சி செய்வது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று (ஜூலை 11) இருவரும் உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது சிறுமியை உடற்பயிற்சி கூடத்தில் தனியாக விட்டு விட்டு அவரது தாய் மட்டும் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது அந்த அடுக்குமாடி குடியிருப்பில் செக்யூரிட்டியாக பணிபுரியும் ராமமூர்த்தி(63) என்பவர் உடற்பயிற்சி கூடத்திற்குள் சென்று சைக்கிளிங் செய்து கொண்டிருந்த சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது: இதனால் அதிர்ச்சடைந்த சிறுமி உடற்பயிற்சி கூடத்தில் இருந்து தப்பி ஓடிச் சென்று அவரது பெற்றோரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். பின்னர் இது குறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அடுக்குமாடி குடியிருப்பின் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வந்த ராமமூர்த்தியை கைது செய்தனர்.

தொடர்ந்து அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இவர் சென்னை திரிசூலம் அம்மன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் கடந்த 9 மாதங்களாக தனியார் அடுக்குமாடி குடியிருப்பின் செக்யூரிட்டியாக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. மேலும், உடற்பயிற்சி கூடத்தில் தனியாக இருந்த சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும் விசாரணையில் அம்பலமானது. இதையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த தாம்பரம் மகளிர் காவல் துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போதை மாத்திரை விற்பனை செய்தவர்கள் கைது: இதனிடையே, குரோம்பேட்டையில் போதை மாத்திரைகளுடன் சுற்றித் திரிந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். குரோம்பேட்டை கோவண்டன் நகர் பகுதியில் குரோம்பேட்டை காவல் துறையினர், ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த மூன்று பேரை பிடித்து விசாரணை நடத்தினர். போலீசாரின் இந்த விசாரணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.


இதையடுத்து அவர்கள் வைத்திருந்த உடமைகளை சோதனை செய்ததில் அவர்களிடம் மூன்று பாக்ஸ் வலி நிவாரணி மாத்திரை அட்டைகள் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தியதில், அந்த விலி நிவாரண மாத்திரைகளை தேனியில் இருந்து வாங்கி வந்து குரோம்பேட்டை, பல்லாவரம் பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அம்மூவர் மீதும் குரோம்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: CCTV: அழகு நிலையத்தில் புகுந்து ஆட்டையைப் போட்ட நபர்கள் கைது!