சென்னை: மதுரவாயல் மேட்டுக்குப்பம் பிரதான சாலை பகுதியில் தனியார் கட்டடத்தில் செயல்பட்டு வரும் மதுரவாயல் நிதி நிறுவனத்தில் பெண் ஒருவர் போலியான நகைகளை வைத்து பணம் பெற்றதாக மதுரவாயல் குற்றப்பிரிவு போலீசாருக்கு புகார் வந்தது. இதனையடுத்து இது தொடர்பாக, போலீசார் நடத்திய விசாரணையில் தங்கமுலாம் பூசிய 393 கிராம் போலி நகைகளை சிறுக சிறுக அடகு வைத்து ரூ.17 லட்சம் பணம் பெற்று சென்ற பெண் நெற்குன்றத்தை சேர்ந்த இந்துமதி என்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, அந்தப் பெண்ணை கைது செய்த போலீசார் அவரிடம் செய்த விசாரணையில், தன்னுடைய கணவர் தான் அடகு வைக்க சொன்னதாகவும்; இது தங்க நகை என்று நினைத்துதான் தான் அடகு வைத்ததாகவும் போலியானது என்று தெரியாது எனவும் கூறியுள்ளார்.
தங்கமுலாம் பூசப்பட்ட நகைகள்; அடகு வைத்து மோசடி: அவரது கணவர் சந்தோஷ் என்பவர் இந்த வழக்கு சம்பந்தமாக தலைமறைவாக பெங்களூருவில் உள்ள நிலையில் போன் மூலம் போலீசார் அவரைத் தொடர்புகொண்டு விசாரணை நடத்தியதில், தனக்கு ஒருவர் கடன் தர வேண்டி இருந்ததாகவும், தன்னிடம் பணம் இல்லை நகைகளை வைத்து பணமாக மாற்றிக்கொள் என்று கொடுத்ததாகவும் கூறினார். அதைத்தான் தன் மனைவியிடம் கொடுத்து பணமாக மாற்ற சொன்னதாகவும் தெரிவித்த அவர், மேலும் இது குறித்து நேரில் வந்து விளக்கமளிப்பதாகவும் கூறியுள்ளார் என போலீசார் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த வழக்கில் போலீசார் இந்துமதி மீது போலியான நகைகளை அடகு வைத்து பணம் பெற்றதாக வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. போலி நகைகளை வைத்து பணம் பெற்ற சம்பவம் மதுரவாயல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரை நகர்த்தும்படி கேட்டவருக்கு அடிஉதை; இருவருக்கு வலைவீச்சு: இதனிடையே, பெரம்பலூரை அடுத்த மாவலிங்கை கிராமத்தை சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் ராஜாராம்(36). இவர் நேற்று டெண்டர் விவகாரம் தொடர்பாக சென்னைக்கு வந்தப் பின்னர் ராஜாராம் சேப்பாக்கத்தில் உள்ள சட்டமன்ற விடுதியில் தனது நண்பரும் சேலம் மாவட்டம் கெங்கவள்ளி சட்டமன்ற உறுப்பினருமான நல்லதம்பியின் அறையில் தங்கியுள்ளார்.
இரவு எம்எல்ஏவுக்கு சொந்தமான காரில் ராஜாராம் மற்றும் அவரது நண்பர் அரவிந்த் ஆகிய இருவரும் அண்ணாசாலையில் உள்ள பிரபல ஓட்டலுக்கு சாப்பிட சென்றனர். பின்னர், ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு காரை எடுக்க வந்தபோது, அவரது கார் முன்னால் வேறொரு கார் நின்றிருந்தால் அதனை நகர்த்துமாறு காரில் இருந்த நபர்களிடம் கேட்டுள்ளார்.
இதற்கு அக்காரில் இருந்த ஒரு ஆணும், பெண்ணும் ராஜாராமிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த ஜோடி ராஜாராமை அடித்து உதைத்துவிட்டு அக்காரில் தப்பிச் சென்றனர். இது குறித்து ராஜாராம் அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீஸார் இருவரை வலைவீசித் தேடிவருகின்றனர்.
கார் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு: இந்த நிலையில், கோவை மாநகரின் ராமநாதபுரத்தை சேர்ந்தவர் விஷ்ணுராம்(32). இவர் பழைய சொகுசு கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இவரது நண்பர் திலீபன்(32). இவர் எண்ணெய் ஆலை வைத்து தொழில் நடத்தி வருகிறார்.
நேற்று இருவரும் தொழில் சம்பந்தமாக காரில் சென்னைக்கு வந்துவிட்டு மீண்டும் இன்று அதிகாலை கோவைக்கு திரும்பியபோது, சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகே சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் இருந்த மரத்தில் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல, நொறுங்கியதால் காரை ஓட்டி வந்த தொழிலதிபர் விஷ்ணுராம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து உயிரிழந்தவரின் உடல் மற்றும் படுகாயமடைந்தவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், அவரது நண்பர் திலீபனுக்கு படுகாயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கார் ஓட்டும்போது, கண் அயர்ந்ததால் விபத்து நடந்ததாக தெரியவந்துள்ளது. மேலும் இது தொடர்பாக அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: Trichy Airport: திருச்சி விமான நிலையத்தில் 6,850 ஆமைக்குஞ்சுகள் பறிமுதல்!