சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் லூயிஸ் பிலிப், பூமா, அடிடாஸ், ஸ்கை பேக்ஸ் போன்ற முன்னணி பிராண்டட் நிறுவனங்களின் பெயரில் போலியாக ஆடைகள், புத்தகப் பைகள் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக சென்னை அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு காவல் துறைக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, காவல் துறையினர் சோதனை செய்து ரூ.4.5 லட்சம் மதிப்புடைய பொருள்களைப் பறிமுதல்செய்து ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைதுசெய்தனர். கைதுசெய்யப்பட்ட ஆறு பேரும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
![ஸ்கை பேக்ஸ், பூமா பெயரில் போலி புத்தகப் பைகள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-02-shirtsissue-script-7202290_08012022115129_0801f_1641622889_232.jpg)
இதையடுத்து, பறிமுதல்செய்யப்பட்ட ஆடைகள், புத்தகப் பைகளை தொண்டு நிறுவனங்களுக்கும், ஆதரவற்றோர் இல்லங்களுக்கும் வழங்கலாம் என்ற நீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில், தமிழ்நாடு குற்றப்பிரிவு ஏடிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவின்பேரில் பறிமுதல்செய்யப்பட்ட ரூ.4.5 லட்சம் மதிப்புடைய பொருள்களைக் காவல் துறையினர் இன்று (ஜனவரி 8) திரு.வி.க. நகரில் உள்ள தனியார் அறக்கட்டளை, செங்குன்றத்திலுள்ள குழந்தைகள் காப்பகம், செங்கல்பட்டு தனியார் குழந்தைகள் காப்பகம், தனியார் ஆதரவற்றோர் இல்லம் ஆகிய நான்கு அமைப்புகளுக்கு பகிர்ந்தளித்தனர்.
இதையும் படிங்க: வெளிநாடுகளிலிருந்து நன்கொடை பெறுவதில் கோடிக்கணக்கில் முறைகேடு: தொண்டு நிறுவனம் மீது வழக்குப்பதிவு