சென்னை காவல் துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், காவல் துறையினர் தங்கள் பணியை உற்சாகமாக மேற்கொள்ளும் வகையில், பல்வேறு உதவிகளைச் செய்துவருகிறார். அந்த வகையில், தற்போது பிறந்தநாள் கொண்டாடும், அனைத்து காவலர், அலுவலர்களுக்கும் அன்றைய நாளில் அவரது கையெழுத்திட்ட பிறந்தநாள் வாழ்த்து அட்டையை வழங்கி, உற்சாகப்படுத்திவருகிறார்.
அதில், 'பிறந்த நாள் காணும் தங்களுக்கு, என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகள். பெருமையும், பாரம்பரியமும் மிக்க சென்னை பெருநகர காவல் துறையில் பணியாற்றும் தாங்கள், நல்ல உடல் நலமும், நீடித்த ஆயுளும், நிறைவான மகிழ்வும் பெற்று, வாழ வாழ்த்துகிறேன்' எனக் குறிப்பிட்டு வாழ்த்து அட்டையை அனுப்பிவருகிறார்.
இதையடுத்து சென்னை காவல் துறையில் பணியாற்றும் காவல் துறையினருக்கு அவர்களது பிறந்தநாளன்று விடுமுறை வழங்கி காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
பிறந்தநாளுக்கு முன்தினம் சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு காவல் நிலையத்தில் வைத்து மற்ற காவலர்கள் வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: காவலர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை வேண்டும் - பொன். கிருஷ்ணமூர்த்தி