கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்தவர் ராபர்ட் நிர்மல்சிங். இவரிடம் வேலை பார்த்து வந்த கார் டிரைவர் அத்துமீறி ராபர்ட்டின் பணத்தை எடுத்து மோசடி செய்துள்ளார். இதன் பின்னணியில் இருந்த சிட்பண்ட் நிர்வாகி சதீஷ்குமாரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் நேற்று கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராபர்ட் நிர்மல்சிங், "நான் சென்னையில் ஆறு போட்டோ ஸ்டூடியோக்களை நடத்தி வருகிறேன். சிட்பண்ட் நடத்தி வரும் என் உறவினர் சதீஷ்குமாரிடம், எனது காருக்கு டிரைவராக பணிபுரிய ஆள் வேண்டும் என்று கேட்டதையடுத்து, அவர் சாம் குமார் என்பவரை அனுப்பி வைத்தார். டிரைவர் சாம் நம்பகத்தன்மையுடன் வேலை பார்த்ததால் அவரை பணம் வசூல் செய்யும் வேலையையும் பார்க்கச் சொன்னேன்.
அவ்வாறு பணத்தை வசூல் செய்துவந்த சாம் எனக்கு தெரியாமல் பெரிய அளவில் மோசடி செய்துள்ளார். இவ்வாறு அவர் மோசடி செய்வது பற்றி அறிந்தவுடன், நான் அவரிடம் கேட்டபோது, அவர் அந்த பணத்தை சிட்பண்ட் நடத்தி வரும் எனது உறவினர் சதீஷ் குமாரிடம் கொடுத்ததாக கூறினார்.
பின்னர், சதீஷ்குமாரிடம் பணத்தை பற்றி கேட்டதற்கு பணத்தை எடுத்து நிலம் வாங்கியதாகவும், வங்கி கணக்கில் வைத்துள்ளதாகவும் கூறினார். சிறிது காலம் கழித்து பணத்தை திருப்பித்தர முடியாது என்று கூறினார். இதனால் அவர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தேன். இதைத் தொடர்ந்து அவரை கைது செய்த காவல் துறையினர் தற்போது புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
இதில் முதல் குற்றவாளியான சாம் இன்னும் தலைமறைவாக உள்ளார். சதீஷ்குமார் பல பேரிடம் கோடி கணக்கில் பண மோசடி செய்துள்ளார். அவர்மீது கன்னியாகுமரியில் பல வழக்குகள் பதிவாகியுள்ளது. எனவே எனக்கு சேர வேண்டிய ரூ.1 கோடியே 80 லட்சம் பணத்தை காவல் துறையினர் சதீஷ் குமாரிடமிருந்து விரைந்து மீட்டுத் தர வேண்டும்" என்று கோரிக்கை வைத்துள்ளார்.