சென்னை : சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அடையாளம் தெரியாத நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்ம நபர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடிக்கும் என்று கூறி இணைப்பை துண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் பதற்றத்திற்குள்ளானது. ரயில் நிலையத்தில் அனைத்து பகுதிகளிலும் ரயில்வே போலீசார் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். நீண்ட சோதனைக்கு பிறகு வெடிகுண்டு மிரட்டல் போலி என்பது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர் வியாசர்பாடியை சேர்ந்த மணிகண்டன் என்பதும், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது. இவர் இதற்கு முன் 2 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக போலீசார் தெரிவித்தனர்.
முன்னதாக கடந்த 19ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு போலி வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு வைத்து இருப்பதாக சென்னையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்ணுக்கு மிரட்டல் விடுத்த மர்ம நபர் இணைப்பை துண்டித்தார்.
இதையடுத்து துணை ஆணையர் சமே சிங் மீனா தலைமையில் தேனாம்பேட்டை போலீசார் சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இல்லத்தில் சோதனை மேற்கொண்டனர். மேலும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் வந்து சுமார் 1 மணி நேரமாக சோதனையிட்ட போது வெடிகுண்டு மிரட்டல் போலியான தகவல் என தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதனையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அந்த மர்ம நபரின் தொலைபேசி எண்ணைக் கொண்டு போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் அவர் கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி பகுதியிலிருந்து பேசியது உறுதி செய்யப்பட்டது. அதனைதொடர்ந்து, சென்னை போலீசார் பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவல் கிடைத்த போலீசார் பூதப்பாண்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட உச்சம் பாறை என்ற இடத்தை சேர்ந்த 30 வயதான இசக்கிமுத்து என்ற இளைஞரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் போலீசார் செய்த விசாரணையில் அந்த இளைஞர் குடிபோதையில் பேசியதாக தெரியவந்துள்ளது. மதுபோதையில் என்ன செய்கிறோம்? என்று தெரியாமல் இவ்வாறு செய்ததாக இசக்கி முத்து கூறியதை அடுத்து அவரை எச்சரித்து காவல் துறையினர் விடுவித்தனர்.
இதையும் படிங்க : Cm House bomb threat: முதலமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது